Friday, April 10, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்வாக்குரிமை - மனித உரிமை பாதுகாக்க சர்வதேச அரசியல் அமைப்புச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்- லோக்...

வாக்குரிமை – மனித உரிமை பாதுகாக்க சர்வதேச அரசியல் அமைப்புச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்- லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேச்சு

“உரிமைகள் சார்ந்த சட்டவியலின் பரிணாமமும் எதிர்காலமும்” என்ற கருத்தரங்கம் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதல்வர் அருண் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவிலேயே முதலாவதாக மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை பெற்றவர் தற்போதைய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ ராமராஜ் ஆவார். மனித உரிமை நீதிமன்றங்கள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருவதை அவரது ஆய்வேடு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது என தலைமை உரையில் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

மனித உரிமைகளை பாதுகாக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆணையங்கள் அரசுக்கு பரிந்துரை வழங்கும் அமைப்புகள் மட்டுமே. ஆனால், மனித உரிமை நீதிமன்றங்கள் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அமைப்பாகும். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 21349 புகார்களும் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் 108717 புகார்களும் பதிவாகியுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவான வழக்குகள் 167 மட்டுமே. இதைப் போல கடந்த 25 ஆண்டுகளிலும் குறைவான வழக்குகளே மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவாகியுள்ளன. மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை அணுகுவதிலும் வழக்கு நடத்துவதிலும் உள்ள சிக்கல்களை நீக்குவதும் மனித உரிமைகள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியமாகும் என்று கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

250 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னராட்சி உலகம் முழுவதும் இருந்தபோது அரசாங்கத்தில் சட்டமன்றம், நிர்வாக அரசு, நீதி துறை ஆகிய மூன்று பிரிவுகள் இருக்க வேண்டும் என்ற அதிகார பிரிவினை கோட்பாடு தோன்றியது. ஜனநாயக அரசுகள் தோன்றியபோது சட்டமன்றம், நிர்வாக அரசு, நீதித்துறை ஆகியன அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளாக இருக்கும் என்று பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் கொண்டு வரப்பட்டன. தற்போது உலகெங்கும் ஜனநாயக அரசுகள் உள்ள நிலையில் ஜனநாயகத்தை பாதுகாக்க தேர்தல் அமைப்புகள் அரசாங்கத்தின் நான்காவது கிளையாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே நவீன அதிகாரப் பிரிவினை கோட்பாடாகும் (Modern theory of Separation of Powers) என்று வீ. ராமராஜ் கூறினார்.

இந்தியாவில் அரசியலமைப்பு உருவானபோது மனித உரிமை ஆணையங்கள், தகவல் உரிமை ஆணையங்கள், ஊழலுக்கு எதிரான லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் போன்ற உரிமை சார்ந்த அமைப்புகள் உருவாகவில்லை. பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்ப்பாயங்கள், மீடியேசன், ஆர்பிட்ரேசன், கன்சிலேசன் அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னரே தோன்றின. உரிமை சார்ந்த அமைப்புகளும் மாற்றுவகை நீதி அமைப்புகளும் அரசாங்கத்தின் ஐந்தாவது கிளையாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே நவீன நீதி கோட்பாடாகும் (Modern theory of Justice). சட்டமன்றம், நிர்வாக அரசு மற்றும் நீதித்துறைக்கு சமமான அரசியலமைப்பு அந்தஸ்துடன் தேர்தல் அமைப்புகளும் உரிமை சார்ந்த அமைப்புகளும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!