எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்மக்களாட்சியின் அச்சாணியான வாக்காளரியல் தனி கல்வி துறையாக உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் வலியுறுத்தியுள்ளார். எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் முதல்வர் டி. லாவண்யா தலைமையில் நடைபெற்றது.
1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ். அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக உள்ள வெளிநாட்டவர்களை பற்றி படிக்கிறோம். வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும் என கல்லூரி முதல்வர் கருத்தரங்கில் தெரிவித்தார்.
வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் பற்றிய முறையான, அறிவியல்பூர்வமான கல்வியே வாக்காளரியலாகும் (Voterology). உண்மையான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதையும், நல்லாட்சி, உலக அமைதிக்கான வழியையும் நோக்கமாகக் கொண்ட வாக்காளரியலின் கோட்பாடுகளை பொதுமக்களுக்கு பரப்புவதே வாக்காளரிலிசம் (Voterologism) என்று கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

உலக நாடுகளில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் பரவ தொடங்கிய போது அரசியல் அறிவியல் கல்வி தனித்துறையாக தோன்றியது. அரசியல் அறிவியல் கல்வி பிரிவில் பல உட்பிரிவுகள் இருப்பதைப் போல வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த கல்வி கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அறிவியலின் உட்பிரிவாக இருந்து வருகிறது. உலகில் ஒரு சில நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் தற்போது தேர்தல்கள் மூலம் மக்களாட்சி நடத்தப்படுகிறது. இன்றைய உலகளாவிய தேர்தல் முறை மக்களாட்சியில் வாக்களிக்கும் உரிமை அச்சாணியாக செயல்படுகிறது. இத்தகைய சமூக மாற்றத்திற்குப் பிறகும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் கல்வி அரசியல் அறிவியலின் ஒரு பகுதியாக தொடர்வதை மாற்றி வாக்காளரியலை தனித்த கல்வித்துறை ஆக்க வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
ஆட்சி மற்றும் அதிகார அமைப்புகள், அரசியல் நடவடிக்கைகள், அரசியல் நிறுவனங்கள், அரசியல் சிந்தனை மற்றும் நடத்தை, மற்றும் தொடர்புடைய அரசியலமைப்புகள் மற்றும் சட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கி பரந்த கல்வி பிரிவாக விளங்குவது அரசியல் அறிவியல். கடந்த காலங்களில் பரந்த படங்களைக் கொண்டுள்ள கல்வி பிரிவுகளில் இருந்து அதன் உட்பிரிவுகள் பிரிந்து தனித்த கல்வி பிரிவுகளாக மாறி உள்ளன. இதைப்போலவே, பரந்த பகுதிகளை கொண்ட வாக்காளரியலை தனித்த கல்வித்துறையாக உலகில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் அங்கீகரிக்க வேண்டும் என்று வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.
பள்ளிகளில் ஒரு பாடமாகவும் இளங்கலை (பி.ஏ.,) பட்டப்படிப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வுத்தாளாகவும் வாக்காளரியல் கல்வி இருக்க வேண்டும். வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,) பட்டத்தை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். வாக்காளரியலின் அடிப்படைகள், தேர்தல் வரலாறு, தேர்தல் நிர்வாகம், ஒப்பீட்டு தேர்தல் முறைகள், தேர்தல் சட்டம் மற்றும் நீதி, வாக்காளர்களுக்கு அதிகாரம் அதிகாரமளித்தல் மற்றும் அறிவு கட்டமைத்தல், அரசியல் இயக்கங்கள் மற்றும் உத்திகள், வாக்காளர் உளவியல் மற்றும் சமூகவியல், வாக்காளர் ஆதரவு இதழியல், ஜனநாயகம், ஆட்சி மற்றும் அமைதி குறித்த வாக்காளரியலின் பார்வை தேர்தல் கணிப்பியல் (Psephology), வாக்காளரியல் ஆராய்ச்சி முறையியல் ஆகியவை வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,) பட்டத்துக்கான பாடங்களாக இருக்க வேண்டும் இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ் குறிப்பிட்டார்.

எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்:
“வாக்கு” என்பது ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலகப் போக்குகளையும் தீர்மானிக்கும் சக்தியாகும். எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். வாக்காளர் அறியாமை மற்றும் ஊழலை தேர்தல் செயல்முறையிலிருந்து வேரறுக்க வேண்டிய கடமை குடிமக்களுக்கு உள்ளது. சட்டமன்றம், செயல் துறை அரசாங்கம், நீதித்துறைக்கு சமமான அரசியலமைப்பு அந்தஸ்துடன் தேர்தல் நிர்வாக அமைப்புகள் அரசாங்க அதிகாரத்தின் நான்காவது கிளையாக இருக்க வேண்டும் என்பவை வாக்காளரியலின் முதல் ஐந்து கொள்கைகள் என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.
தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கான நெறிகாட்டு அமைப்பு, வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆணையம், தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்கள் ஆகியன தேர்தல் நிர்வாக அமைப்புகளின் பிரிவுகளாக இருக்க வேண்டும். தேசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் தகவலறிந்த வாக்காளர்களை உருவாக்குவதற்கும் சர்வதேச சட்டங்களையும் நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். உண்மையான ஜனநாயகத்துக்கும் நாட்டின் நல்லாட்சிக்கும் உலகின் அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும். வாக்காளரியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை (Academic, Research and Practice) தனிக்கல்வித்துறையாக உருவாக்க வேண்டும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்ப வாக்காளரிலிசத்தை இயக்கமாக நடத்த வேண்டும் என்பவை வாக்காளரியலின் மற்ற ஐந்து கொள்கைகள் என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.





