ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்ட வாகன சோதனையில் விதிமுறைகளை பின்பற்றாத 12 மோட்டார் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ரூ.2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் வடக்கு மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசன் உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டார். இச்சோதனையில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத டாட்டா ஏஸ் வாகனங்கள், ஒரு மேக்சி கேப் வாகனம், ஒரு சரக்கு வாகனம் என 9 வாகனங்களும், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக 3 கனரக வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது. இதில் 9 வாகனங்கள், வெண்ணந்தூர் காவல்நிலையத்திலும், 4 வாகனங்கள் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் சோதனை அறிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்று விதிமுறைகளை மீறி வாகன சோதனை நடத்தப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், ஆயில்பட்டி, ஆகிய பகுதிகளில் இது போன்ற சோதனைகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.