நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகக் கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், இதனை சீரமைக்க வலியுறுத்தி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் புதன்கிழமை நூலகம் முன்பாக நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.புதுப்பட்டி கிளை நூலகம் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் சுமார் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுகளால் வேயப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் ஓடுகள் விழும் நிலையில், கட்டிடத்தில் மரங்கள் முளைத்தும், மழை பெய்தால் நீர் புத்தகங்கள் சேதமடையும் நிலையிலும் உள்ளது. மழை காலங்களில் இதனுள்ளே செல்வதற்கு புத்தக வாசிப்பாளர்கள் அஞ்சும் நிலை உள்ளது. எனவே இதனை சீரமைத்து தரவேண்டும் என மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பல முறை வலியுறுத்தினர்.

ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கிளை நூலகம் முன்பாக குடைபிடித்து புத்தகம் பயிலும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு புதிய கட்டிடம் அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி கோஷமெழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நூதனப் போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.