கல்வி கற்கும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஇ) பள்ளி சேர்ந்து பயின்று வரும் பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக ராசிபுரம் தனியார் பள்ளி மீது புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதம் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடம் ஒதுக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், இலவச ஊட்டச்சத்து உள்ள மதிய உணவு, இலவச சீருடை போன்றவை கட்டாயம் வழங்கப்பட்டாக வேண்டும்.

ஆனால் சில தனியார் பள்ளிகள் 25 இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. பல இடங்களில் சிறப்பாக நடைபெறவில்லை என்பதற்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் RTE கல்வி திட்டத்தில் மூலம் பயிலும் ஏழை மாணவர்களிடம் பல்வேறு வகையான இதர கட்டணங்கள் சிறுக சிறுக வலியுறுத்தி வசூலிக்கப்படுவதாகவும் பல பெற்றோர்களுடைய குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் ராசிபுரம் “வாசவி வித்யாலயா ” தனியார் பள்ளியில் RTE திட்டத்தின் மூலம் கல்வி கற்கும் ஏழை மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி கட்டணம் கட்ட சொல்லி வலியுறுத்தி வருவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு காரணம் தனியார் பள்ளிக்கு அரசிடம் இருந்து வரவேண்டிய இதற்கான பழைய நிலுவைத் தொகை வரவில்லை என காரணம் கூறப்படுகிறதாம். நாமக்கல் மாவட்ட அரசு நிர்வாகம், கல்வித்துறை உடனடியாக தலையிட்டு கல்வி கற்கும் ஏழை எளிய மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன் வலியுறுத்தியுள்ளார்.