நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் இணைந்து ‘பாக்கெட் இ’ என்றத் தலைப்பில் ஆசிரியர்களுக்கான மின்னியக்கப் பயன்பாடு குறித்த செயல்முறைப் பயிற்சி முகாமினை புதன்கிழமை நடத்தியது.

இதற்கான தொடக்க விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி என்ஜினியர் இ.என்.சுரேந்திரன் வரவேற்றுப் பேசினார். ரோட்டரி சங்க உறுப்பினர் டி.பி.வெங்கடாசலபதி பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட ரோட்டரி மகிழ்ச்சிப் பள்ளிகள் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கிப் பேசினார். நாமக்கல், மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் பேசிய அவர், பொருட்களின் அணுவில் உள்ள எலக்ட்ரான்கள் செயல்படும் முறையைக் கொண்டு மனிதர்களுக்கு பயன்படும் பல்வேறு பொருட்கள் உருவாக்கத்தின் அடிப்படை விதிகளைப் புரிந்து கொண்டால் மின்னியல் பொருட்களை எளிதாக உருவாக்க முடியும் என்றும், இந்த மின்னியல் பொருட்களை உருவாக்கம் செய்வதால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். ராசிபுரம் இன்னர்வீல் சங்கத் தலைவர் சுதா மனோகரன், இது மின்னியல் பொருட்களின் யுகம் என்பதால் மின்னியல் பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அதனுடைய பயன்பாடுகள் என்ன என்பது குறித்து விளக்கினார்.
தற்காலிக சர்க்யூட் தளமான ப்ரெட்போர்டில் சிறிய கம்பிகள் மற்றும் மின்சாதனப் பாகங்களை இணைத்து சர்க்யூட்டை சோதித்து பரிசோதித்தல், ஒளி உமிழும் டையோடை சர்க்யூட்டில் இணைத்தல், மின்தடையை அளத்தல், மின் சமிக்ஞைகள் மற்றும் சக்தியைப் பெருக்க அல்லது மாற்றப் பயன்படும் குறைக்கடத்தி சாதனமான டிரான்சிஸ்டரில் முள் இணைத்தல், கம்ப்யூட்டர்களில் பயன்படும் பிலிப் – பிளாப் சர்க்யூட், ஒரு பொருள் தூரத்திலோ அல்லது நெருக்கத்திலோ இருக்கும்போது அதை மின்சார சமிக்ஞைகளாக மாற்றி, வேறு ஒரு சாதனத்துக்கு வழங்கும் அமைப்பான பிராக்ஸிமிட்டி சென்சார் சுற்று ஒளி சார்ந்த மின்தடை சார்ந்த உணர்வி (எல்டிஆர் சென்சார்) மற்றும் ஒலி அலைகளை பண்பலை மூலம் பரப்ப உதவும் சாதனமான பண்பலைப் பரப்பி போன்ற மின்னியக்கம் சார்ந்த அறிவியல் அடிப்படை விதிகளின் செயல்முறைப் பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் கருத்தாளராக சேலம் மாவட்டம், பாகல்பட்டி, அரசுமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப. அருளானந்தம் பங்கேற்று பயிறசியளித்தார். ராசிபுரம் இன்னர்வீல் சங்கச் செயலர் சிவலீலா ஜோதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பயிற்சியின் முடிவில் ரோட்டரி சங்க செயலர் கே. ராமசாமி நன்றி கூறினார்.