நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டதில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதி சேர்ந்தவர் பிரகாஷ் பெயின்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கவின்ராஜ் (14), ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கவின்ராஜ் பள்ளி இடைவேளையில், கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு திரண்ட உறவினர்கள், மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனக் கூறி மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார் ஆய்வாளர் எஸ்.சுகவனம், வட்டாட்சியர் எஸ்.சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசி மறியலை கைவிடச் செய்தனர். பின்னர் மாணவர் சடத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவர்களுக்கு மோதல்:
மாணவர் கவின்ராஜ் உயிரிழப்பிற்கு சக மாணவர் தாக்கியதே காரணம் என கூறப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து குறித்து காவல்துறையினர், வருவாய் துறையினர் ,க ல்வித் துறையினர் பள்ளியில் ஆசிரியர்கள் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார், ஆய்வாளர் சுகவனம், வட்டாட்சியர் எஸ்.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) கற்பகம், தனியார் பள்ளிகள் (ஜோதி), மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பூங்கொடி, பள்ளிகளின் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி உள்ளிட்டோர் சக மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த பிப்.21, பிப்.24 ஆகிய இரு நாட்கள் மாணவர்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர் கவின்ராஜை சக மாணவர் ஒருவர் தாக்கியுள்ளார். பள்ளி கழிவறையில் நடந்த இந்த சம்பவத்தில் மயங்கிய அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இது குறித்து ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் தாக்கிய மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தாக்கிய மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு எல்ஐசி பகுதியில் உறவினர்கள் சாலையில் கற்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மாணவர்களிடையேயான பிரச்சனை ஆசிரியர்களுக்கு தெரிந்து நடந்ததா இல்லை ஆசிரியர்கள் கவனத்துக்கு தெரியாமல் நடந்துள்ளதா என்றும் விசாரணை நடத்தியுள்ளனர்.