ரோட்டரி மாவட்டம் (2982) சார்பில் பப்ளிக் இமேஜ் கருத்தரங்கு ஏற்காடு லயன்ஸ் கன்வென்சனல் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) நடைபெற்றது. முன்னதாக பப்ளிக் இமேஜ் டீம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர புல்லட் வாகனப் பேரணி ஏற்காடு ஏரி அருகே துவங்கி நடைபெற்றது. இந்த இருசக்கர புல்லட் வாகனப் பேரணி ஏற்காடு நகரின் முக்கிய சாலைகள் வழியாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறு சென்று கருத்தரங்கு நடைபெறும் அரங்கம் முன்பு நிறைவடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பிப்.21-ல் துவங்கிய இப்பேரணி சுமார் 800 கி.மீ. தொலைவு பயணித்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி,சேலம் வழியாக ஏற்காடு வந்தடைந்தது.

பின்னர் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றோர், ரோட்டரி பப்ளிக் இமேஜ் சேர்மேன் A.ரவி என்கின்ற திருமூர்த்தி தலைமையில் பேரணி ஜோதியை கருத்தரங்கு வளாகத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி. சிவக்குமார் இடம் ஒப்படைத்தனர்.

பின்னர் நடைபெற்ற பப்ளிக் இமேஜ் கருத்தரங்கில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம் .முருகானந்தம் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ரோட்டரி ஆளுநர் வி. சிவகுமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மண்டலம் 5-ன் பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளர் பி .எஸ் .ரமேஷ்பாபு பங்கேற்று பேசினார். சிறந்த ரோட்டரி சங்கத்திற்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து நெல்லை ஜெயந்தா நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சேவை செய்வதற்கு தேவையானது பணமா? மனமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பலரும் பங்கேற்று பேசினர்.