ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பரிசளித்து கெளரவிக்கப்பட்டார். ராசிபுரம் அடுத்துள்ள அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் என்பவர் மனைவி சங்கீதா (40), இவரது உறவினர் சசிகலா என்பவருடன் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சங்கீதா தனது கழுத்தில் இருந்து 5 சவரன் நகையை கழற்றி சசிகலாவிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து சசிகலா நகைகளை கைப்பையில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது கைப்பையில் வைத்திருந்த 5 சவரன் நகைகள் வெண்ணந்தூர் அண்ணாசிலை பகுதியில் கைப்பையுடன் தவறிவிழுந்துள்ளது. சாலையில் கிடந்த கைப்பையுடன் நகைகள் இருந்ததை கண்ட அப்பகுதியில் இருந்து பேரூராட்சியின் தூய்மை பணியாளர் ராதாமணி என்பவர் இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனிடையே நகையை தவறவிட்ட சங்கீதா, சசிகலா இருவரும் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது சாலையில் தவறவிட்ட நகைகள் சாலையில் கிடந்ததும், தூய்மைப் பணியாளர்கள் காவல் நிலையம் வந்து ஒப்படைத்ததும் அறிந்து மகிழ்ச்சியடைந்தனர். இதனையடுத்து, தூய்மை பணியாளர் ராதாமணியை ராசிபுரம் டிஎஸ்பி்., விஜயகுமார், கே.சுகவனம் ஆகியோர் அழைத்து சன்மானம் வழங்கி பாராட்டி கெளரவித்தனர்.