திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தேனாறு, பாலாறு ஒடும் என்றார்கள். ஆனால் கஞ்சா, டாஸ்மாக், லாட்டரி சீட்டு தான் ஒடுகிறது என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கடுமையாக தாக்கிப்பேசினார். மேலும் தமிழகம் போதை பொருட்களின் முன்னோடி மாநிலமாக மாறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவாக வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தை கருணாநிதியிடும் இருந்து காப்பாற்ற தான் அதிமுகவை எம்ஜி்ஆர் உருவாக்கி பொற்கால ஆட்சியை வழங்கினார். ஆனால் தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுள்ளது. பெண் போலீஸ் கழுத்தில் இருக்கும் செயினை பறித்து சென்றுள்ளனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசுக்கே பாதுகாப்பு இல்லை.
அம்மா ஜெயலலிதா ஆட்சியின் போதும் எடப்பாடியார் ஆட்சியின் போதும் சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் தற்போது போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. பள்ளிக்கு முன்பே கஞ்சா விற்கின்றனர். நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 கொலைகள் நடக்கின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை தி.மு.க., பிரமுகர் அங்கேயே சென்று பாலியல் கொடுமை செய்துள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு அரசியில், ஆட்சியில் இருந்தால் ஒரு அரசியல் என தி.மு.க. இரட்டை வேடம்போடுகிறது . இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பி. தங்கமணி பேசினார். கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.