மது ஒழிப்பு வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் சேலத்தில் இருந்து மதுரைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ள 93 வயது காந்திய சிந்தனையாளருக்கு ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் விடுதலை போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட சின்னக்கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சி.பிரான்க்ளின் ஆசாத் காந்திஜி (93), ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் காந்தி (49) இருவரும் காந்திய சிந்தனையாளர்கள். இவர்கள் ஏற்கனவே மது ஒழிப்பினை வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் சேலம் முதல் சென்னை வரையும், சேலம் முதல் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் வரையும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்டியில் உள்ள சி.பிரான்க்ளின் ஆசாத் காந்திஜி குடிலில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவியுள்ளார். இதனை காந்திஜியின் கொள்ளுப் பேரன் துசார் காந்தியை அழைத்து திறந்து வைத்துள்ளார். மேலும் சேலம் காந்தி சிலை முன்பாக 1330 நாள் தொடர்ந்து காலை வேளையில் தொடர்ந்து மது ஒழிப்புக்கு எதிரான பிரச்சார பணியையும் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் மது ஒழிப்பு வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைக்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திட சேலம் முதல் மதுரை வரை நடைபயணம் மேற்கொள்ளவும் இருவரும் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த ஜன.16-ல் சேலம் காந்தி சிலை முன்பாக தனது பயணத்தை துவங்கி நடைபயணமாக மதுரை செல்ல முடிவு செய்து பயணத்தை தொடர்ந்துள்ளனர். வழியில் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் அருள்மிகு வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் இவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கம் சார்பில் சங்கம், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவருமான க.சிதம்பரம், பள்ளியின் தலைமையாசிரியர் ரெ.உமாதேவி ஆகியோர் வரவேற்றனர். இவர்கள் நாமக்கல், பரமத்திவேலூர், கரூர்,திண்டுக்கல் வழியாக மது ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொண்டவாறு பயணம் மேற்கொண்டு காந்தி நினைவு தினமான ஜன.30-ல் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் சென்று நடைபயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.