கிராம சபை கூட்டத்தில் ஆலோசனை
ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், இளைஞர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாலும், மாணவியர் கேலி கிண்டலுக்கு ஆளாவதாலும் அரசு மதுபான டாஸ்மாக் கடை மட்டுமின்றி, சந்துக்கடையையும் நிரந்தரமாக மூடவேண்டும் என ஆக.15-ல் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொருள் குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.

வடுகம் ஊராட்சி கூலித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை, சந்திக்கடை போன்றவற்றால் கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி வாழ்வை தொலைத்துக்கொண்டுள்ளனர். இதனால் அவர்களது பெற்றோர் பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மதுபோதையில் இளைஞர்களிடம் அடிதடி தகராறும் ஏற்படுகிறது. பள்ளி மாணவியர்கள் மது பிரியர்களிடம் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார்கள் ஆகையால் வடுகம் ஊராட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்க மதுபான கடை மற்றும் சந்து கடைகள் நிரந்தரமாக மூட வேண்டும் என ராசிபுரம் ஒன்றிய பாஜக பொதுச்செயலர் பி.ஏழுமலை, ஏற்கனவே ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினரிடம் மனு அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடுவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மன்ற அனுமதிக்கு விவாதிக்கப்பட்டது.