திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:
தீர்மானம் : 1
நாற்பதுக்கு நாற்பது வென்ற தொடர் வெற்றி நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தை அவருக்குப் பிறகு தன் தோளிலும் நெஞ்சிலும் சுமந்து கழகத் தலைவராக இயக்கத்தைக் கட்டுக்கோப்புடனும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்கள் நலத்திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாகவும் திறம்படச் செயலாற்றி, ‘நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்து, அதற்கேற்ப தேர்தல் களத்திற்கான வியூகத்தை அமைத்து, ஓய்வறியாமல் உழைத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியின் நிலவரத்தையும் துல்லியமாகக் கண்காணித்து,2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்குப் பெற்றுத் தந்ததுடன், ‘நாடும் நமதே’ என்ற முழக்கத்தால், பாசிச மதவாத அரசியலுக்கு எதிராக இந்தியா கூட்டணியைக் கட்டமைப்பதில் முனைப்புடன் செயலாற்றி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் வலிமைமிக்க எதிர்க்கட்சி வரிசை உருவாகவும் – இந்திய ஒன்றியத்தை ஆள்பவர்களின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளுக்குக் கடிவாளம் போட காரணமாக திகழ்ந்தவரும், தி.மு.க.வுக்குத் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்,2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடி, தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது உளம்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கழகத் தலைவரின் கட்டளைக்கேற்ப அயராது தேர்தல் பணியாற்றி நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைக் குவித்திட பாடுபட்ட, கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், கழகமே உயிர்மூச்சென உழைக்கும் உடன்பிறப்புகள், திராவிட இயக்கக் கொள்கையாளர்கள், தன்னார்வலர்கள், தோழமை இயக்கத்தினர், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வாக்களித்த பொதுமக்கள் என அனைவருக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது.
தீர்மானம் : 2
தி.மு.கழகத்தின் பவள விழா ஆண்டில் சென்னையில் எழுச்சிமிகுந்த முப்பெரும் விழா!
தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒவ்வொரு உடன்பிறப்பும் உள்ளன்புடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், பேரறிஞர் அண்ணா வழியில் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இயக்கமாம் தி.மு.க.வின் பவளவிழா ஆண்டு நிறைவினை, கழகம் தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று கொண்டாடி மகிழ இருப்பதால், இந்த முக்கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் தி.மு.கழகம் படைத்த சாதனைகள் – கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மகத்தான திட்டங்கள் – திராவிட மாடல் அரசைத் திறம்பட நடத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள்நலத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிச் சுவர் விளம்பரங்கள் எழுதப்படுவதுடன், தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக் கூறும் நிகழ்வுகளுடன், கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திடவும், ஒவ்வொரு ஊரிலும் உள்ள நம் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது சிலைகளைப் பொலிவுபடுத்தி, மாலையிட்டு மரியாதை செலுத்துவது என்றும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிப்பதுடன்;
தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்த இலட்சிய விழாவான முப்பெரும் விழா, இந்தப் பவள விழா ஆண்டில், தி.மு.கழகம் தொடங்கப்பட்ட சென்னையில் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் எழுச்சி மிகுந்த விழாவாகக் கொண்டாடப்படும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 3
உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற தலைவர் கலைஞரின் வழியில் மாநில உரிமைகளைக் காத்திடுவோம்!தனது நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தினால், இந்திய ஜனநாயகத்தைக் காக்கின்ற தூணாகத் திகழ்ந்த நூற்றாண்டு நாயகராம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழினைப் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் மதிப்பிலான தலைவர் கலைஞர் அவர்களின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.அதேவேளையில், மாநில உரிமைக்கான குரலைத் தொடர்ந்து முழங்கிடும் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையிலும், தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், இரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.