நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி வளாகத்தில் நடைபெற்ற அரசு மாணவர் விடுதி வார்டன்கள் கூட்டத்தில் அனைவரிடமும் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக கட்டாய வசூல் நடைபெற்றதாக புகார் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரையடுத்து, விடுதி வார்டன்கள் கூட்டம் நடந்து வந்த கூட்டத்தில் அதிரடியாக புகுந்த நாமக்கல் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஎஸ்பி., சுபாஷினி தலைமையிலான போலீஸார் அங்கியிருந்த 10-க்கும் மேற்பட்ட அரசு மாணவர் விடுதி வார்டன்களிடம் இருந்த ரொக்கப்பணத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனைகளில் வார்டன்களிடம் இருந்த ரொக்கம் ரூ.1.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்த வார்டன்களிடம் நாமக்கல் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸார் இந்த பணம் எங்கிருந்து வந்தது. யாருக்கு எதற்காக வசூல் செய்யப்பட்டுள்ளது. யார் இதனை வசூலிக்க உத்தரவிட்டனர் என வார்டன்களிடம் கிடிக்கிபிடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த பணம் வசூலில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விடுதி வார்டன்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக இருந்த பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு தான் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.