நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் சி.பானுமதி தலைமை வகித்து, விழாவினை தொடங்கி வைத்தார்.
விழாவில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் மா.கோவிந்தராசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினார். விழாவில் பேசிய அவர், சமுதாயம் உயர வேண்டுமெனில் மாணவர்கள் பொது நலன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உடல் நலன், மன நலம் மாணவர்களுக்கு அவசியம். சுயமாக சிந்திக்கும் ஆற்றல், நல் மனம், நல்லறிவு, நல்லொழுக்கம் உடையவர்களாக இருப்பது அவசியம்.
நம்நாடு வல்லரசாக மாறவேண்டுமானால் அது இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது. அதற்கேற்றவாறு மாணவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார்.
முன்னதாக பட்டமளிப்பு விழா துவக்கவுரையில் பேசிய கல்லூரி முதல்வர் சி.பானுமதி, இக்கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள் ஏறத்தாழ 3800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர் . பளுதூக்கு போட்டி, சிலம்பம், கபாடி ஆகிய போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்று கல்லூரிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர் என வாழ்த்தி பேசினார். பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் , துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.