நாமக்கல் மக்களவை தொகுதியில் பாஜக., சார்பில் வேட்பாளராக கே.பி. ராமலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, ராசிபுரம் அடுத்துள்ள பிள்ளாநல்லூர் பாவடி பகுதியில் கட்சியின் தேசியச் செயலர் வானதி சீனிவாசன் திறந்த வெளி ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவைகளை திட்டங்கள் வாயிலாக வீடுகளுக்கு கொண்டு சேர்த்தவர் நாட்டின் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டுக்கு 11 லட்சம் கோடிகளை இந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கொடுத்துள்ளது. மோடி தான் பிரதமர் என்பதை இந்திய நாட்டு மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். ஆனால் எதிரணியினர் யார் பிரதமர் என தெரியாமல் நிற்கின்றனர். ராகுல் காந்திக்கு கூட வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. மத்திய அரசின் நிதி திட்டங்கள் நமக்கு வராமல் நேரடியாக மக்களுக்குச் செல்வதால் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் உள்ளார். விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நேரிடையாக வங்கி கணக்குக்கு வருகிறது. யாருடையை சிபாரிசும் தேவையில்லை. ஆனால் தமிழக அரசின் திட்டங்கள் அப்படியல்ல. கட்சியினர் சிபாரிசும் தேவைப்படும். அலுவலங்கள் சென்று பார்த்து கவனிக்க வேண்டும். இதனை மக்கள் உணரவேண்டும் என்றார்.
பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் அரசியல் அனுபவம் வாய்ந்தவர். இந்த பகுதி மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்தவர். அவர் வெற்றி பெற்றால் பாரத பிரதமரிடம் என்ன வேண்டும் என்பதை கேட்டு பெற்றுத்தரும் வல்லமை படைத்தவர். மேலும் இந்த பிரச்சாரத்தின் போது பாஜக மாவட்ட நிர்வாகிகள் என்.பி.சத்தியமூர்த்தி, வி.சேதுராமன், சுகன்யா நந்தகுமார், மு. வடிவேல், ராஜேஷ், தமிழரசு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.