கடந்த அதிமுக அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது லாட்டரி விற்பனை, கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி குற்றம்சாட்டினார். நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியுடம் ராஹா சு.தமிழ்மணியை ஆதரித்து ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராசிபுரம் புதிய பஸ் நிலையம், காமாட்சியம்மன் கோவில், காட்டூர் சாலை, கடைவீதி, நாமக்கல் சாலை, சேலம் சாலை, பழைய பஸ் நிலையம், பட்டணம் சாலை, கவரைத்தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவர் மேலும் பேசியது:
மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் விவசாயிகள், விசைத்தறியாளர்கள் என அனைத்த தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு சொத்துவரி வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நல சாதனை திட்டங்களை செய்துள்ளோம். அதிமுக செய்த அனைத்து திட்டங்களையும் தாங்கள் செய்ததாக தற்போது திமுகவினர் கூறிவருகின்றனர். திமுக ஆட்சியில் எங்கும் போதைப் பொருள்கள் சுலபமாக கிடைக்கிறது. இதே போல் லாட்டரி சீட்டு பல இடங்களில் விற்கப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முடிவு கொண்டுவரும் வகையில் சு.தமிழ்மணி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களி்கக வேண்டும். திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை என குறைந்த அளவு பயனாளிகளுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு, விலைவாசியை உயர்த்தி விட்டனர். இன்று அரசி விலை, மளிகை சாமான்கள் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் சு.தமிழ்மணி மக்களிடம் பேசியதாவது:
அ.தி.மு.கவிற்கு நீங்கள் வாக்களித்து நான் வெற்றி பெற்றால் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். உங்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க நான் நடவடிக்கை எடுப்பேன். தி.மு.க.,விற்கு வாக்களித்தால் அவர்கள் வாக்குறுதிகளை கொடுப்பதோடு சரி எந்த ஒரு நடவடிக்கையோ திட்டங்களையோ செயல்படுத்த மாட்டார்கள். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க.,வின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். என்னை வெற்றி பெற செய்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து உங்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவேன் என்றார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா, நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.