தேர்தல் பிரச்சாரத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நாமக்கல் அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணி உடல் நலம் தேறி மீண்டும் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் காமராஜர் சிலை, அண்ணாசிலை, சர்கார்தோப்பு, தங்கசாலை உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் பிரசாரம் நடத்தி திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, நடிகர் ரவிமெளரியா உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சு.தமிழ்மணி பேசியது:
நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் தொகுதி பிரச்சனை தீர்ப்பேன் என உறுதியளிக்கிறேன். அர்ப்பணிப்போடு இருந்த அரசு தான் அதிமுக அரசு. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யும் அரசு அதிமுக அரசு என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு உடல் நலம் சரியில்லை என பொய் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். நான் ஃபினிக்ஸ் பறவை திரும்ப திரும்ப வருவேன். தொடர்ந்து வெய்யிலில் இருந்ததால், உடல் நலம் பாதித்து மருத்துவமனை ஒய்வுக்கு சென்று வந்தால், காணாமல் போய்விட்டார் என்கின்றனர். அறுவை சிகிச்சைக்கு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். நான் உங்களுக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். ஜூன்.4-ம் தேதி வரை பொருத்திருப்போம். அதன் பின் நமது விளையாட்டு வைத்துக்கொள்வோம் என்றார்.
போலி மதுபானம், கஞ்சா, லாட்டரி சீட்டுகள் எளிதில் கிடைக்கிறது – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு:
பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசியது: கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டது. விசைத்தறி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் நலிவடைந்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வந்துள்ளதால், குறைந்த எண்ணிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கியுள்ளார்கள். விலைவாசி, குடிநீர் கட்டணம், வீட்டு வரி, மின்கட்டணம் போன்றவை உயர்ந்துள்ளது. இதனை எண்ணிப்பார்க்க வேண்டும். எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் ஏராளம். திமுக அரசு எதனையும் செய்யவில்லை. கஞ்சா போன்ற போதைப் பொருள், லாட்டரி எளிதில் கிடைக்கும் வகையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் அதிமுகவிற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.