ராசிபுரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர், அவரது மனைவி நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான சம்பவம் அவரகளது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ராசிபுரம் அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.பி.பழனிவேல் (63), கோழிப்பண்ணை தொழில் மற்றும் கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருள்கள் விற்பனை தொழில் செய்து வருகிறார். மேலும் தருமபுரி மாவட்ட அரூர் பகுதியில் இந்தியன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, இந்தியன் பப்ளிக் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர் கடந்த ஆக.14-ம் தேதி இவரது மனைவி அருள்மணி (57), உறவினர்களான அசோகன் (67), கற்பகம் (61), காளிப்பட்டி பகுதியை சேர்ந்த மாராயி (56) உள்ளிட்ட பிற மாவட்டத்தை சேர்ந்த உறவினர்களுடன் ஆன்மீக பயணமாக நேபாளம் சென்றிருந்தார். இவர்கள் சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன ஏற்பாட்டில் நேபாளம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் புதன்கிழமை காலை 8.45 மணியளவில் ராசிபுரத்தில் உள்ள குடும்பத்தினருடன் அலைபேசியில் அவர்கள் பேசியுள்ளனர்.

இதனையடுத்து நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. எந்தவித தொடர்பும் இல்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், தொழிலதிபர் ஏ.கே.பி.பழனிவேல் மகன் தமிழ்முருகன், அசோகன் என்பவரது மகன் சரவணன் ஆகியோர் பெங்களூர் சென்று அங்கிருந்த விமானம் வாயிலாக நேபாளம் சென்றுள்ளனர்.

மாயமான தொழிலதிபர் ஏ.கே.பி.பழனிவேல், கொங்கு நாடு மக்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் உடன் பிறந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.




