உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராசிபுரம் நகரில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மா.மதிவேந்தன் உள்ளிட்ட திமுகவினர் பலர் செவ்வாய்க்கிழமை கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராசிபுரம் – வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை பகுதியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சர் மா.மதிவேந்தன், நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர் ஆகியோர் தலைமையில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா.கார்த்திக், நகர இளைஞரணி செயலர் யோகராஜன், நகர் மன்ற உறுப்பினர் ஆர்.வினாயகமூர்த்தி , ஜெயக்குமார் சுதா உள்ளிட்ட திமுகவினர் பலரும் கைதாகினர். தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர். இதே போல் ஆண்டகளூர்கேட், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பகுதியிலும் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.




