ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர் நுழைவு அனுமதி அட்டையில் புகைப்படம் சரியில்லை என தேர்வு அலுவலரால் மாணவர் வெளியேற்றப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் நுழைவுத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 349 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, மையத்தில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களை காவல்துறையினர் மற்றும் நீட் தேர்வு மைய அலுவலர்கள் வளாகத்திற்குள் செல்லும் மாணவ மாணவிகளின் நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை சரி பார்த்து மையத்திற்கு உள்ளே அனுப்பி வைத்தனர். இந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் மகன் திவாகர் புகைப்படம் விண்ணப்பத்தில் ஒரு மாதிரியாகவும், நுழைவு ஹால் டிக்கெட்டில் வேறு மாதிரியான புகைப்படம் இடம் பெற்றிருந்ததால், அம்மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் வெளியேற்றப்பட்டார். விண்ணப்பத்தில் இருப்பதும், ஹால் டிக்கெட்டில் இருப்பதும் என்னுடைய படம் தான் என மாணவர்கள் எடுத்துக்கூறியும், தேர்தல் அலுவலர்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவர் தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.





