Saturday, March 28, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்ராசிபுரம் காக்காவேரி பகுதி அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் மீதான புகாருக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ராசிபுரம் காக்காவேரி பகுதி அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் மீதான புகாருக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி பகுதியில் செயல்பட்டு வரும் இரு அங்கன்வாடி மையங்கள் சாதிய பாகுபாட்டுடன் செயல்பட்டு வருவதாக எழுந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி விளக்கமளித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அவரது செய்தி அறிக்கை:

ராசிபுரம் வட்டம், காக்காவேரி ஊராட்சியில் 7 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் காக்காவேரி புது காலனி கிழக்கு அங்கன்வாடி மையம் மற்றும் காக்காவேரி புது காலனி மேற்கு அங்கன்வாடி மையம் ஆகிய இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடத்தில் 1500-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ளதால் இரண்டு மையங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. காக்காவேரி புது காலனி கிழக்கு அங்கன்வாடி மையம் செயல்படும் பகுதியில் பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பட்டியலினம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குழந்தைகளும் பயன்பெறுகின்றனர். மேலும், அருகிலுள்ள காக்காவேரி மேற்கு அங்கன்வாடி மையத்தில் பட்டியலினம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

மேற்கண்ட இரண்டு அங்கன்வாடி மையங்களும் முறையே 1975, 1982 முதல் இவ்விடத்திலேயே துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகை 700 -க்கும் மேற்பட்டுள்ள இடங்களில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. காக்காவேரி புது காலனி மேற்கு மையத்தினை இடித்து புதியதாக கட்டும் வரை (மே, 2024 முதல் மே, 2025) ஓராண்டு காலத்திற்கு இரண்டு மையங்களும் இணைந்து செயல்பட்டன. மேலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டுமான பணி நடைபெற்ற ஜுலை, 2025 முதல் பிப்ரவரி, 2026 வரை காக்காவேரி புது காலனி மேற்கு மையத்தில் தொடக்க பள்ளிக்கூடம் இயங்கி வந்த காலத்தில், இரண்டு மையங்களும் இணைந்து செயல்பட்டன. மீண்டும், மார்ச், 2026, முதல் இவ்விரு மையங்களும் தனித்து செயல்பட்டு வருகின்றன. தற்போது, இரண்டு அங்கன்வாடி மையங்களிலும் தினசரி ஒரே அட்டவணைப்படி ஒரே மாதிரி உணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி மையங்களில் அனைத்து குழந்தைகளையும் சத்துணவு கொடுப்பது, வளர்ச்சி குறித்த ஆய்வுகள் ஆகியவை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மூலம் முறையாக எவ்வித பாகுபாடும் இல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
.
காக்காவேரி புது காலனி கிழக்கு மையம் செயல்படும் பகுதியில் மொத்தம் 240 குடும்பம் உள்ளது. அதில் 238 பட்டியலின குடும்பமும், 2 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குடும்பமும் வசித்து வருகின்றனர். இம்மையத்தில் முன்பருவ கல்வி பயிலும் 15 குழந்தைகளில், 13 பட்டியலின குழந்தைகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குழந்தைகள் இருவரும் பயனடைகின்றனர். காக்காவேரி மேற்கு மையத்தில் பட்டியலின குடும்பம் -3, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குடும்பம்-57, பிற்படுத்தப்பட்டோர் குடும்பம்-190 உள்ளது. இம்மையத்தில் நிர்ணயிக்கப்பட்ட 15 குழந்தைகளில் பட்டியலின குழந்தைகள்-2, மிகவும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகள்-2, பிற்படுத்தப்பட்ட 11 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

எனவே, மேற்காணும் இரண்டு அங்கன்வாடி மையங்களிலும் பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் ஒன்றாகவே பாகுபாடின்றி பயன்பெற்று வருகிறார்கள். பெற்றோர் தங்களது விருப்பப்படி தங்களது குழந்தைகளை இந்த இரண்டு மையங்களில் எந்தவொரு மையத்திலும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!