ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது மிகுந்து காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வருவாய் பிரிவில் வழங்கப்படும் மனுக்கள் விரைந்து தீர்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இதன் மீது அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராசிபுரம் நகர மன்றக் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர் தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் கே.பழனி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும், புதைக்குழி சாக்கடை திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்வதில்லை என குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள், இத்திட்டம் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு காலம் முடிவடைந்துள்ளதால், கழிவு நீர் வெளியேற்றும் சீரமைப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் பேசி சரி செய்யப்படும் என்றனர். மேலும் ராசிபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் 6 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை ஐந்து நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்ய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என நகர்மன்றத் தலைவர் ஆர்.கவி்தா சங்கர் தெரிவித்தார்.
புதிய பேருந்து நிலையம் திறப்பு இல்லை:
மேலும், ராசிபுரம் நகராட்சி சார்பில் அணைப்பாளையம் பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் பணிகள் முடிந்து திறக்கப்படும் என்று பொதுமக்களிடம் பேச்சு உள்ளது. ஆனால் அங்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்துவிட்டு தான் பேருந்து நிலையம் திறக்கப்படும். தற்போதைக்கு பேருந்து நிலையம் திறப்பு இல்லை என கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தெரிவித்தார். மேலும் பேருந்து நிலையம் திறக்கப்பாடாலும், புறநகர் பேருந்து நிலையமாக செயல்படும். தற்போதுள்ள பேருந்து நிலையமும் நகர்புற பேருந்து நிலையமாக செயல்படும். இதனால் தற்போதைய பேருந்து நிலையத்தில் இருந்து எப்போதும் போல் சேலம், நாமக்கல், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் செல்லும் பயணிகள் சென்று வரலாம் என நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதாசங்கர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தமிழக முதல்வருக்கு நன்றி:
மேலும் தமிழக அரசு கடந்த ஐந்தாண்டு காலமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. அதேபோல ராசிபுரம் நகராட்சிக்கும் பல திட்டங்களை ஒதுக்கீடு செய்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக சிறப்பான திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ராசிபுரம் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தால் ராசிபுரம் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதற்கும் தமிழக முதல்வருக்கு நகர்மன்றக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை தேவை:
நகராட்சி பகுதியிலும் நில அளவையில் முறையாக அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். நகர அளவை அலுவலர்கள் அவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், இது போன்ற சில கட்டிடங்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது என்றார். இது போன்ற புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சி அலுவலர்கள் மக்கள் பிரச்சனையில் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற புகார் உள்ளது. குறிப்பாக வருவாய் பிரிவு பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை என நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கூட்டத்தில் குற்றம் சாட்டினார். இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.





