ராசிபுரம் அருகேயுள்ள பூசாரிபாளையம் கிராமத்தில் காகம் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருவதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். பூசாரிபாளையம் கிராமத்தில் சுமார் 1500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமப்புற பகுதி என்பதால் அங்கு அதிக அளவில் காகம் காணப்படுகிறது. சமீப நாட்களில் இப்பகுதியில் பறந்து திரியும் காகங்கள் அடிக்கடி உயிரிழந்த கிடப்பது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அப்பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மரத்தில் இருக்கும் காகங்கள் உடல் பாதிக்கப்பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடும் நிலையும், காகங்கள் பல செத்து விழுவதும் நிகழ்ந்துள்ளது. இதனால் பெற்றோர், மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். காகங்கள் உயிரிழப்புக்கு பறவை காய்ச்சல் காரணமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகவும், சுகாதாரத்துறையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.






