உலகில் பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி முறையை பின்பற்றும் நிலையில் வாக்கு, வாக்காளர் , தேர்தல்கள் குறித்த கல்வியானது இன்னும் அரசியல் அறிவியலில் ஒரு உட்பிரிவு பாடமாக இருப்பது ஏற்புடையதல்ல. வாக்காளரியல் கல்வி பல்கலைக்கழகங்களில் தனி படிப்பாக இடம் பெற வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் குறிப்பிட்டார்.
இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டு ஆண்டு கால மைல் கற்களும் சவால்களும் என்ற தலைப்பில் பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் முதல்வர் டி. ரவிசங்கர் தலைமையில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற டாக்டர் வீ.ராமராஜ் பேசியது:
75 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பில் 106 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெகிழும் தன்மை உள்ளதால் இந்திய அரசியலமைப்பு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பது மக்களாட்சி முறையாகும். உலகில் மன்னராட்சி படிப்படியாக மறைந்து பல நாடுகளில் மக்களாட்சி ஏற்படத் தொடங்கிய காலத்தில், சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர், அரசியல் அறிவியலுக்கான தனி படிப்பு உருவானது. மக்களாட்சிக்கு அடித்தளமாக திகழும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த கல்வியும் ஆய்வும் வாக்காளரியல் (Voterology) ஆகும். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி முறையை பின்பற்றும் நிலையில் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த கல்வியானது இன்னும் அரசியல் அறிவியலில் ஒரு உட்பிரிவாக இருப்பது ஏற்புடையதல்ல. வாக்காளரியல் கல்வி பல்கலைக்கழகங்களில் தனி படிப்பாக இடம் பெற வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல் நடத்தும் அமைப்புகள் தன்னாட்சியாக செயல்படுவதை உறுதி செய்வதும் பாதுகாப்பதும் மக்களின் கடமையாகும் என்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
மேலும் கருத்தரங்கில் மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி பேசுகையில், வாக்காளரியலையும் அதன் கொள்கைகளையும் வரையறுத்து வாக்காளரியலை தனி கல்வியாக உருவாக்க வேண்டும் என்று கடந்த 1996 முதல் ராமராஜ் வலியுறுத்தி வருகிறார். புகழ் பெற்ற மேற்கத்திய அரசியல் தத்துவங்களையும் இந்திய அரசியல் சிந்தனைகளையும் போல பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் பிறந்த முனைவர் ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள வாக்காளரியல் கோட்பாடுகள் தற்போது உலகில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அவரது வாக்காளரியல் தத்துவம் விரைவில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் பாடமாக்கப்படும் காலம் அருகாமையில் உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் மக்களாட்சியில் உச்ச அதிகாரமாக (Supreme Power) திகழ்வது வாக்கு என்பதும் எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள் (“Voters above all else”) என்பதும் வாக்காளரியலின் முதலாவது கோட்பாடாகும். வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் என்பவை ஜனநாயக அமைப்புகளின் மூன்று சமமான பரிமாணங்கள் ஆகும். வாக்காளர்களின் அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் சக்திகளாகும் என்பது வாக்காளரியலின் இரண்டாவது கோட்பாடாகும். கொள்கை மற்றும் செயல் திட்டம் (Policy and Action Plan) எதுவும் இல்லாமல் அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவர்கள் மக்கள் நல அரசாங்கத்தை நிறுவ மாட்டார்கள் என்பது வாக்காளரியலின் மூன்றாவது கோட்பாடாகும். இந்த கோட்பாடுகள் மக்களாட்சியை வலுப்படுத்தி அரசியலமைப்பை பாதுகாக்க உதவும் என்றும் வி.பி.ஆர். இளம்பரிதி தெரிவித்தார்.
கருத்தரங்கில் மாநில தகவல் ஆணையர் எம்.நடேசன் பேசுகையில், நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் நீதித்துறைக்கு இணையாக தேர்தல் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். தேர்தல்களை நடத்தும் தேர்தல் ஆணையத்தைப் போல வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரம் அளிக்கவும் ஒரு ஆணையமும் விரைவாக தேர்தல்களை தேர்தல் வழக்குகளை முடிக்க தேர்தல் தீர்ப்பாயங்களும் தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்பது வாக்காளரியலின் நான்காவது கோட்பாடாகும். வாக்காளரியல் என்பது நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும் பாதையாகும். வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்களில் இருந்து ஊழலை வேரறுப்பதற்கு குடிமக்கள் கூட்டுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்பது வாக்காளரியலின் ஐந்தாவது கோட்பாடாகும். வாக்காளரியல் சர்வதேச சட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என்பது வாக்காளரியலின் ஆறாவது கோட்பாடாகும். இந்த கோட்பாடுகள் அரசியலமைப்பு எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க முடியும் என்றும் எம். நடேசன் குறிப்பிட்டுப் பேசினார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜெயசுதா பேசுகையில், தேர்தல் மற்றும் வாக்களிப்பு பற்றிய புள்ளிவிவர, சமூகவியல் அடிப்படையிலான ஆய்வுகளைக் குறித்த பாடப்பிரிவு தேர்தல் கணிப்பியல் (Psephology). வாக்கு வாக்காளர் மற்றும் தேர்தல்களை பாதுகாத்து மக்களாட்சி அமைப்புகளை பாதுகாக்க முனைவது வாக்காளரியலாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிசம் (Voterologism) என்பது வாக்காளரியலின் ஏழாவது கோட்பாடாகும். குழந்தைகளுக்கு வாக்காளரியல் கல்வியை கற்பித்து அரசியலமைப்பை பாதுகாப்போம் என்றும் கருத்தரங்கில் அவர் வலியுறுத்தினார்.
பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.





