மத்திய அரசின் கடை வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசின் கூடுதல் சொத்து வரி தொழில் வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்து வணிகர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.
பேரமைப்பின் மாநில துணை தலைவர்கள் செல்வராஜ், சுப்பிரமணியம், சங்கர், மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார் வரவேற்று பேசினார். மாநில மூத்த துணை தலைவர் பெரியசாமி கண்டன ஆர்பாட்டம் நோக்கம் குறித்து பேசினார்.