வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை புரிந்து கொண்டு அரசியல் செய்யாமல் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் எம் எல் ஏ வேண்டுகோள்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் எதிர்பாராத மழையின் காரணமாக அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. மக்கள் வீடுகளை இழந்தும், உடைமைகளை இழந்தும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்ற நிலையில் அரசு நிவாரண பணிகளை முடிக்கி விட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அரசியல் இலாபங்களை கருதி கருத்துகளை தெரிவிக்காமல் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இப்போது பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல் யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு தன்னுடைய நிலைப்பாடுகளை மாற்றி கரையை கடந்திருக்கிறது. கடந்ததோடு பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்தால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் வானப்பகுதிகளில் பல மணி நேரம் நிலையாக நின்று மழையாக பொழிந்ததின் விளைவில் நிறைவாக எதிர்பாராத பாதிப்புகளை இந்த மாவட்டங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் துரிதப்படுத்த வேண்டுமென்று அரசை கேட்டுக்கொள்கிறோம். நிவாரண பணிகள் ஒருபுறம் நடந்தாலும் குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் எதனால் வெள்ளப்பெருக்கு எடுத்தது, அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டுமென்ற தரவுகளை இந்த நேரத்தில் சேகரிக்க வேண்டும். அதன்படி திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பாதிப்புகளை தவிர்க்கலாம். இதை கவனத்தில் கொண்டு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு உயர் அதிகாரிகளை நியமித்து இந்த நேரத்தில் அந்த தரவுகளை திரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.