சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அந்தக் கட்சி; 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தவெகவின் தலைவர் விஜய் காணொலியில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழக வெற்றி கழகம்
தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் விரைவில் தவெகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியை இப்போதே ஆரம்பித்துவிட்டாலும் மக்களின் பல்ஸை தெரிந்துகொள்ளும் விதமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிகிறது. ஆனால் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவிருக்கிறது.
விஜய்யின் பாதை என்ன?: கண்டிப்பாக தான் சந்திக்கும் முதல் தேர்தலை விஜய் கூட்டணி இல்லாமல் தனித்துதான் சந்திக்க வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து பலரிடமும் இப்போது இருக்கிறது. மேலும் தேசிய கட்சிகள் பாதையில் செல்வாரா இல்லை கழகங்களின் வழியில் பின் தொடர்வாரா என்ற கேள்விகளையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். இப்படி இப்போதே தமிழ்நாடு அரசியல் களத்தில் கொஞ்சம் பரபரப்பையும், அவர் மீதான கவனத்தையும் பெற்றிருக்கிறார். செயற்குழு: இன்னும் ஒரு படம் மட்டுமே நடிக்கவிருக்கிறார் விஜய். அந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு இன்று சென்னையில் நடந்தது. இதில் அக்கட்சியின் தொண்டர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்திற்காக காணொலியில் தோன்றி தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
விஜய்யின் அறிவுரை: விஜய் அந்தக் காணொலியில் பேசுகையில், “பொதுமக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். இடையூறுகள் மற்றும் விமர்சனங்கள் வந்தால் அதனை கண்டுகொள்ளாமல் இன்முகத்துடன் கடந்து செல்ல வேண்டும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி பணி தீவிரமடையும். குக்கிராமங்களில்கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். 80 வயதில் இருப்பவர்களுக்கும் நமது கட்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.