Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வகையில் மாற்றத்தை...

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வகையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்: கட்சியினருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், கிழக்கு மாவட்டம் ராசிபுரம் நகர பாஜக சார்பில் மண்டல் தேர்தல் குழு பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பயிலரங்கில் கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான டாக்டர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார்.

இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். ராசிபுரம் மண்டல் பகுதியில், பாஜகவிற்கு அதிக உறுப்பினர்களை சேர்த்த அக்கட்சி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்த அவர் கூட்டத்தில் பேசியது:

கடந்த செப்டம்பர் 2 அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி பாஜக மட்டுமே ஆகும். இப்போது 10 கோடி உறுப்பினர்கள் இக்கட்சியில் உள்ளனர். மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இதுவரை 15 கோடி உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது. உலகில் இவ்வளவு உறுப்பினர்கள் வேறு எந்த கட்சிக்கும் இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம். பாஜக இன்னும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் முழு முனைப்போடு ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம் அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இருக்கின்ற ஒரே கட்சி பாஜக ஆகும். ஆனால் திமுக குடும்ப உறுப்பினர்களை மட்டுமே பதவி தருகிறார்கள். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், குடும்ப உறுப்பினர்கள், மாவட்டங்களிலும் திமுக குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வருகின்றனர். இதனால் மாநிலத்திற்கு எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால், பாஜகவில் சாதாரண தொண்டர் கூட மிகப் பெரிய நிர்வாகியாக கட்சி பொறுப்பாளராக வர முடியும்.

இவ்வளவு வலிமை மிக்க கட்சியில் உறுப்பினராக இருப்பது நமக்கு பெருமையாகும். தொடர்ந்து 3-வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி பிரதமர் பணியாற்றி வருகிறார். 100-வது சுதந்திரத்தை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருப்பதை அனைவரும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே இணைப்பு என பல திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நகரில் கூட வந்தே பாரத் ரயில் நின்று செல்கிறது. அந்த அளவிற்கு ரயில்வேயில் நெட்வொர்க் பரந்து விரிந்து உள்ளது.

சேலத்தில் இருந்து விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் ஏழை எளிய மக்களின் நலனை கருதி விவசாயிகளுக்கு 6000 ரூபாய், அனைவருக்கும் பிரதமர் வீடு திட்டம், வீடுகள் தோறும் கழிப்பறை திட்டம், இலவச எரிவாயு திட்டம், இலவச அரிசி பருப்பு உணவு பாதுகாப்பு திட்டம் என்பன உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைத்து 3-வது முறையாக மக்கள் பேராதரோடு இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற 2047-ல் 100-வது சுதந்திர தின நாளில் வல்லரசு நாடாக இருக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சி அடைந்த குடிமகனாக இருக்க வேண்டும். அப்துல் கலாம் கண்ட கனவு வளர்ச்சி அடைந்த பாரதத்தை வழங்குவது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியாகும். பாஜகவால் மட்டுமே வளர்ச்சி அடைந்த பாரதத்தை வழங்க முடியும்.

ஆனால் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2004 முதல் 2014 வரை நாட்டின் வளர்ச்சிக்கு அக்கறை காட்ட வில்லை. ஊழல், கொள்ளை சம்பவங்கள் அதிகம் இருந்தன. இன்று இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கண்டு வளர்ச்சியை நோக்கி பிரதமர் நமது நாட்டை வழிநடத்தி செல்கிறார்.

காஷ்மீரில் 370 சரத்து நீக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழை எளிய மக்கள் வாக்களிக்கின்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியில் அவர்களால் பங்கு கொள்ள முடிகிறது. பட்டியலின மக்கள் ஆட்சியில் பங்கு கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. அதனை உடைத்து அவர்களும் இன்று ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர்.

அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். அதற்கான பணியை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு கொடுத்த கொள்கை ரீதியாக வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறது.

வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் வளர்ச்சி அடைந்த வல்லரசு நாட்டை உருவாக்குவதே நமது லட்சியமாக உள்ளது. அந்த லட்சியத்தை நோக்கித்தான் நாம் பயணம் செய்து வருகிறோம். எனவே, பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக செய்து வருவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கட்சிப் பணி, நாட்டு தேசிய பணியை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் கட்சிக்கு புதியதாக 50 உறுப்பினர்களை சேர்த்து, கட்சிக்கு மேலும் வலிமை சேர்க்க வேண்டும்.

அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை போல, மிகப்பெரிய உத்வேகத்தோடு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும். செங்கோட்டையை பிடித்ததுபோல தமிழகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நாம் பிடிக்க வேண்டும். அதே இலக்கோடு நாம் தொடர்ந்து கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றார் எல்.முருகன்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் என்.பி. சத்யமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் வி.சேதுராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!