ராசிபுரம் பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில் அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீர் மின்மோட்டார் வைத்து அகற்றும் பணிகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக பலத்த மழை பெய்ததால் நகரின் சாலைகள் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் தீபாவளி தினமான அக்.31-ல் சுமார் 40 நிமிடம் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவாக ராசிபுரம் பகுதியில் மட்டும் 72 மிமீ. அளவு பெய்தது. இதனை தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் பலத்த மழை பெய்தது.
இதனையடுத்து நகரில் பல பகுதியில் வாகனப் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. மேலும் நகரில் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையால் தெருக்கள், வீடுகளில் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்த மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதே போல் மழைநீரில் விஷபூச்சிகளும் கலந்து வந்து வீடுகளில் புகுந்ததால், தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பெரிதும் பாதிப்படைந்தனர். குறிப்பாக சி.பி.கன்னைய்யா தெரு, சிவானந்தா சாலை ஆகிய பகுதிகளில் சாலோயோர சாக்கடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டதால், நீர் வெளியேறாமல் வீடுகளிலும் தேங்கியது. வீடுகளில் தேங்கிய சாக்கடை நீருடன் கலந்த மழை நீரை அகற்ற பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
அரசு மருத்துவமனையில் புகுந்த நீரை அகற்ற நடவடிக்கை:
ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளால் பல வார்டுகளில் மழைநீர் புகுந்தது. இதனையடுத்து அங்கிருந்த உள் நோயாளிகள் பத்திரமாக வேறு பாதுகாப்பான வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். குறிப்பாக பெண்கள் வார்டில் மழை புகுந்ததால் அதிலிருந்த நோயாளிகளுக்கு வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு மின்மோட்டார் பயன்படுத்தி தேங்கிய மழைநீர் அப்பறுப்படுத்தும் நடவடிக்கையில் மருத்துவமனை பணியாளர்கள் ஈடுபட்டனர். மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றவும், நோயாளிகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட மருத்துவ நலத்துறை இணை இயக்குனர் ஏ.ராஜ்மோகன் ஆகியோர் உத்தரவிட்டதையடுத்து, ராசிபுரம் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கே.கலைச்செல்வி மேற்பார்வையில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பெண்கள் வேறு வார்டுகளில் தங்க வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மழை காலங்களில் இது போன்று ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுவது குறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஏ.ராஜ்மோகன் தெரிவிக்கையில், மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும். தற்போது நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தேவையான வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேங்கிய மழை நீர் மின்மோட்டார் வைத்து அகற்றப்பட்டுள்ளது என்றார்.