நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை தொடர்ந்து பக்தர்களை மாட்டு தாண்டும் வினோத வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை மாடு தாண்டும் வழிபாடு நடைபெறும்.
இந்த வழிபாட்டில் எடப்பாடி, கொங்கணாபுரம், சின்ன திருப்பதி, கச்சிப்பள்ளி, பள்ளிப்பட்டி, மூங்கில்காடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெருமாளை குலதெய்வமாக கொண்டதிரளானோர் இக்கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு செய்தனர். ராசிபுரம் நகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சக்தி அழைத்து மேள தாளங்கள் முழங்க காளை மாட்டுடன் ராசிபுரம் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இதில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் மீது மாடுதாண்டும் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு மாடு அழைத்து வரும் வழியில் ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்து கொண்டனர். படுத்திருந்த பக்தர்களை மாடி தாண்டி செல்லும்போது அதன் கால் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் வாக்குப் பலிக்கும், கால் பட்டு விட்டாலோ அல்லது தாண்டாமல் சென்றுவிட்டாலோ பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறாது என்பது ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் வெள்ளி காப்பு சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கருடாழ்வார் ஆகியோர் ராசிபுரம் முக்கிய வீதி வழியாக திருத்தேர் பவனி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.