திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம் பிறந்தநாள் விழாவினை தொடர்ந்து தேசிய அளவிலான கருத்தரங்கம், புத்தகம் வெளியீடு, டி ஆர் சுந்தரம் சினிமா கழகம் தொடக்க விழா போன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.
இதற்கான தொடக்க விழாவில் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவங்களின் தாளாளர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார். இவ்விழாவில் தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம், தலைமை திட்ட அலுவலர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பத்மநாபன் பாரம்பரிய சினிமாவின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சண்முகராஜா, தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆவணப்பட இயக்குனர் டி.கே.வி. ராஜன் கலந்து கொண்டு பழங்கால திரை படங்கள் குறித்துப் பேசினர்.
விழாவில் டி.ஆர்.சுந்தரம் சினிமா கழகம் தொடங்கப்பட்டு, காட்சி தொடர்பில் துறையின் மாணவர்கள் பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் மரபு மற்றும் முன்னோடிகளை நினைவு கூறுதல் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. ஆய்வு கட்டுரைகள் ISBN உடன் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. நடிகர் சண்முகராஜா “டி. ஆர். சுந்தரம் தயாரித்த திரைப்படங்கள் குறித்து மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து டி. கே .வி. ராஜன் ” வரலாற்று நோக்கு மற்றும் சமூக அம்சங்களில் தமிழ் திரைப்படம் ” என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் டி.ஆர். சுந்தரம் இயக்கிய மற்றும் தயாரித்த படங்களின் குறிப்பிடத்தக்க பழமையான படக்காட்சிகள் திரையிடப்பட்டன. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை காட்சி தொடர்பியல் துறைத்தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பா. கணேஷ் பிரபு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் காட்சி தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியை காவ்யா , ஆதித்யா கிருஷ்ணன் உள்ளிட்ட கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.