தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளியில் + 2 முடித்து அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, கல்லூரி கல்வி இயக்குனர் செ.கார்மேகம் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கல்லூரி கனவுகளுடன் வரும் லட்சக்கணக்கான மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்தும் முதல் 7 நாட்களுக்கு வழிகாட்டும் பயிற்சி நடத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மூலமாக கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி நடைபெற்று வரும் வழிகாட்டும் பயிற்சி முகாமில் சமூகத்தின் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்களை அழைத்து மாணவர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்திடும் வகையிலும், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், அரசியல் ஆளுமைகள், தொல்லியளாளர்கள், விஞ்ஞானிகள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ள மூன்றாம் பாலினத்தினர், உளவியல் நிபுணர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு துறையினர், கலை இலக்கியவாதிகள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள், முன்மாதிரி பெண் ஆளுமைகள் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களிடையே பேசிவருகின்றனர்.
நாமக்கல் அரசு கல்லூரியில்:
இதன்படி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கான புத்தாக்க மற்றும் வழிகாட்டும் பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.ராஜா வழிகாட்டுதலின்படி பல்வேறு துறை பேராசிரியர்களைக்கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி கணிப்பொறித்துறைத் தலைவர் பி.கமலக்கண்ணன், உடற்பயிற்சி இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன், கணிதத்துறை தலைவர் டாக்டர் கணேசன், இயற்பியல் துறை தலைவர் டாக்டர் சின்னுசாமி, தலைமையில் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
முதலாம் ஆண்டு அனைத்து துறை மாணவிகளுக்கான 2-ம் நாள் பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் ஏ.ஹெச்.ஷாகுல் அமீத், ஆர்.ரமேஷ்கிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பங்களிப்பு குறித்தும், துறையில் மாணவ மாணவியர்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் பேசினர்.
இதே போல் அரூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் பி.செந்தில்குமார், விளையாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் நாமக்கல் மாவட்ட வால்வீச்சு பயிற்சியாளர் எஸ்.பிரபு குமார், கால்பந்து பயிற்சியாளர் எஸ்.சதீஷ்குமாரி, கோகோ / கபடி பயிற்சியாளர் புவனேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் அரசின் பயிற்சிகள், ஊக்கத்தொகைகள், வேலை வாய்ப்புகள், விளையாட்டுத்துறையி வேலைவாய்ப்புக்கு மாணவிகள் அவர்கள் திறனுக்கு ஏற்ற விளையாட்டினை தேர்வு செய்து திறனை வளர்த்துக் கொள்ளும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். பயிற்சி முகாமில் அனைத்து துறையில் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.