அண்ணா திமுக அரசின் கடந்த 10 ஆண்டுகால மக்கள் நலத்திட்டங்களை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி குறிப்பிட்டார். ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்காளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மேலும் பேசியதாவது:
2011 முதல் 2021 வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அதிமுக அம்மா ஆட்சி நடந்தது. குழந்தை பிறப்பு முதல் மக்கள் பயனடையும் வகையில் கொண்டுவரப்பட்ட அதிமுக அரசின் அத்தனை திட்டங்களையும் இப்போது நிறுத்தி வைத்துள்ளது திமுக அரசு. தொட்டில் குழந்தை திட்டம் துவங்கி பின்னர் சத்துணவு திட்டம், காலனி திட்டம், பள்ளி செல்பவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், அம்மா உணவகம், அம்மா கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம் போன்ற திட்டம் கொ டுத்த அரசு அம்மா அரசு. ஆனால் இந்த திட்டங்களை நிறுத்திவிட்டு தற்போது உரிமைத்தொகை என ரூ.1000 கொடுக்கிறேன் என்கிறது திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் கொடுப்பதாக சொல்லி, தற்போது குறைந்த அளவு பயனாளிகளுக்கு மட்டும் தேர்தல் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் என்கின்றனர்.
திருமணத்தின் போது தாலிக்கு தங்கம், உதவித்தொகை பெரியதா? படிக்கும் போது மாதம் ரூ.1000 பெரியதா ? என எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ஏதாவது நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் தற்போது எங்கும் போதைப்பொருள் அதிகரித்து இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவினரே இதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற அவலநிலைதான் திமுக ஆட்சியில் நடந்து வருகிறது. இது மோஷமான சூழ்நிலை.இதனை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை தான். எம்ஜிஆர் என்ன காரணத்துக்கு கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்தாரோ அதற்காக இன்றும் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுவது அதிமுக தான். எனவே தொகுதிக்கு நல்ல பல திட்டங்கள் செயல்படுத்திட அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய ,பேரூர் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர்.