நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் ராசிபுரம் மேட்டுக்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள கோவிலில் சுவாமி தரினம் செய்த அவர், திறந்த ஜீப்பில் சென்றவாறு பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: மத்திய பாஜக அரசு கரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசி போட்டு பாதுகாத்துள்ளது. கரோனா தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் தேசத்திற்கு பல திட்டங்கள் செய்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன் 10-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 3 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
புதிய புதிய தொழில்கள் உருவாகியுள்ளது. ஏற்றுமதியை அதிகப்படுத்தி இறக்குமதியை குறைக்கப்பட்டுள்ளது. எந்த பொருளும் இறக்குமதியே இருக்கக்கூடாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேட் இன் சீன், மேட் இன் ஜப்பான் என்ற நிலையை மாற்றி மேட் இன் இந்தியா என்ற நிலை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி. இதனால் இந்தியா ஏற்றம் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற 100-ம் ஆண்டு கொண்டாடும் வேளையில் 2047-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும். ஏவகனை முதல் தோட்டா வரை அத்தனை பொருள்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. எல்லா துறைகளிலும் இந்தியா வளர்ந்துள்ளது. வளரும் நாடுகள் பட்டியில் இருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலுக்கு வந்த அந்த நாடுகளுக்கும் தலைமை ஏற்றுள்ளது அது தான் ஜி-20.
1980ம் ஆண்டு எம்ஜிஆரின் வேட்பாளர் எனச்சொல்லி சட்டமன்றத்துக்கு வாக்கு கேட்டேன். தற்போது அதே உணர்வோடு மோடியின் வேட்பாளராக போட்டியிடுவதில் பெருமை கொள்கிறேன். பிரதமர் மோடியின் வாக்குறுதியோடு, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் வரை ரயில் பாதை இரு ஆண்டுகளில் அமைக்கப்படும். தென் மாநிலங்களுக்கான விவசாய விளை பொருள் ஏற்றுமதி மண்டலம் நாமக்கல் தொகுதியில் ஏற்படுத்தப்படும். ஐஐடி., ஐஐஎம் போன்ற உயர்கல்வி மையங்கள், தொகுதியில் இரு நவோதயா பள்ளிகள் ஏற்படுத்தப்படும். கொல்லிமலையில் மிளகுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தருவதுடன் தேசிய சுற்றுலா தளமாக உருவாக்கப்படும். என்றார். பிரச்சாரத்தின் போது, மாவட்ட பாஜக பொதுச்செயலர் வி.சேதுராமன், மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, துணைத் தலைவர் ஆர்.டி.இளங்கோ, செயாளர்கள் தமிழரசு, வள்ளிராஜா, ஒன்றியத் தலைவர் மு.வடிவேலு உள்ளிட்ட கூட்டணி கட்சி்களான பாமக, அமமுக, ஐஜேகே கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.