.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணா திமுக வேட்பாளராகப் போட்டியிடும் ராஹா சு.தமிழ்மணி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களிடம் ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும் வாக்கு சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் செல்லும் இடங்களிளெல்லாம் கிராமப்புறங்களில் மூதாட்டிகளிடம் பெரும் வரவேற்பு இருப்பதால் அவர்களை அள்ளித்தூக்கி சென்றவாறு வாக்கு கேட்டு வருவது கூலித்தொழில் செய்து வரும் மூதாட்டிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம், திருச்செங்கோடு, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், சங்ககிரி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அவர் திரண்டிருந்த கூலித்தொழிலாளர்கள், மூதாட்டிகளுடன் கட்டித்தழுவியும், எம்ஜிஆர் பழைய பாடல்கள் பாடி வாக்கு சேகரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு பின் மீண்டும் வாக்கு சேகரிக்க வந்த அவரை., கிராமப்புறங்களில் வரவேற்பு அளிக்கும் போது, நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற… இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என பெண்கள் பாடியது வரவேற்பு அளித்தனர்.
எம்ஜிஆரின் பாடல்களான வாங்கய்யா வாத்தியாரய்யா உங்களை வரவேற்க வந்தோமய்யா…. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமைய்யா… வாங்கய்யா வாத்தியாரய்யா… என்ற நம்நாடு படத்தின் பாடலையும், அன்னாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஒலை குடிசை கட்டி, பொன்னான உலகென்று பெயருமிட்டால் இந்த ஊரு சிரிக்கும், இந்த நாடு சிரிக்கும் என்ற என் அண்ணன் படத்தில் வரும் பாடல்களையும் பாடி கிராமப்புற ஏழை பெண்களிடத்தில் கலகலப்பூட்டி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இது போன்ற வாக்கு சேகரிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த பெண்கள், மூதாட்டிகள் அவருக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் பேசிய ராஹா சு.தமிழ்மணி அங்கிருந்த மூதாட்டிகள் பலரை கட்டித்தழுவி உறவாடி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மூதாட்டி ஒருவரை அள்ளித்தூக்கி தலைமேல் வைத்து நடந்து சென்றவாறு வாக்கு சேகரித்தது அப்பகுதி பெண்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அவர் வெற்றி பெற்றால் தொகுதியில் சொந்த செலவில் ஐஏஎஸ்., ஐபிஎஸ் பயிற்சி மையம் ஏற்படுத்துவேன் என்றும், போர்வெல் வாகனம் வாங்கி சொந்த செலவில் அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சனை தீர்ப்பேன் என்றும் உறுதியளித்து வருவது குறிப்பிடத்தக்கது. வாக்கு சேகரிப்பின் போது அவருடம் சங்ககிரி தொகுதியை சேர்ந்த ஒன்றிய, பேரூர், ஊராட்சி கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் ஈடுபட்டனர்.