உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக வெற்றி பெறும் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் குறிப்பிட்டார். ராசிபுரம் நகரில் பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்தும், ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா நடைபெறுவதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்தும் நகாராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினருடன் நாமக்கல் சாலை, பழைய பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நகரில் முக்கிய திருவிழா தொடங்கியுள்ள நிலையில், போக்குவரத்து பாதிக்காத வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ராசிபுரம் நகரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும். தற்போது செயல்பட்டு வரும் பழைய மருத்துவமனை அவசர கால மருத்துவமனையாக நீடிக்கும் என்றார். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மாற்றம் குறித்த கேள்விக்கு, தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், தற்போதுள்ள பேருந்து நிலையமே தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார் .

மேலும் நகரில் கட்டிட பணி முடிந்து விட்டதற்கான தற்காலிக சான்றிதழ் கொடுத்து நகராட்சியின் முன்னாள் ஊழியர் முறைகேடு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் இது போன்ற போலி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதா என விசாரணை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் பணிகள் தொடங்கிவிட்டோம். கட்சி தலைவர் கொடுத்துள்ள உற்சாகத்தால் தொண்டர்கள் துடிப்போடு உள்ளனர். உள்ளாட்சி தேர்தலிலும் தவெக வெற்றி பெறும் என்றார். சிறு வணிகர்கள் கடை வாடகையில் 18 சதம் ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்து தெரிவித்த அவர், இதனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் எஸ்.கோபிநாத், வட்டாட்சியர் ஏ.மகேஸ்வரி, காவல்துறை ஆய்வாளர் ஆர்.நாகலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




