ராசிபுரம் (தனி) தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தவெக வேட்பாளர் டி.லோகேஸ் தமிழ்செல்வன் தெரிவித்தார். ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.முருகனிடம் தனது வேட்புமனுவை சனிக்கிழமை அவர் தாக்கல் செய்தார். முன்னதாக திரளான கட்சியினருடன் ராசிபுரம் பழைய பேருந்து நிலையில் இருந்து ஊர்வலமாக வந்த அவர் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
ராசிபுரம் மக்களுக்கு வீடுதோறும் சென்று தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்ற அடிப்படையில் எனக்கு கட்சியின் தலைவர் விஜய் சீட் வழங்கியுள்ளார். இத்தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராக்குவது தான் எங்கள் நோக்கம். அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனபால் இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என அமைச்சர் மதிவேந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு நான் பதிலளிக்க வேண்டியுள்ளது. தற்போது போதமலைக்கு சாலை போடப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு அனுமதி பெற்று கொடுத்ததே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எனது அப்பா தனபால் தான். யாரோ கொண்டு வந்த திட்டத்தை இவர்கள் கொண்டு வந்தது போல் காட்டிக்கொள்கின்றனர்.
கடந்த 5 ஆண்டில் இத்தொகுதியில் அமைச்சராக இருந்த மதிவேந்தன்,பொறுப்பு வகித்த சுற்றுலாத்துறை, வனத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை சார்ந்து எந்த திட்டத்தையும் தொகுதிக்கு கொண்டு வரவில்லை. இதனை எடுத்துச்சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கப்போகிறேன். ராசிபுரம் சுற்றி குளம், குட்டைகள் உள்ளன. சுற்றுலா துறை கையில் இருந்த போதும், படகுகள் விடுவது போன்ற எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. வனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் வனத்துறையை பயன்படுத்தி எந்த திட்டங்களும் செய்யவில்லை. இதனை எடுத்துச்சொல்லி என் பிரச்சாரம் இருக்கும் என்றார். தவெக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.





