லோக் ஆயுக்தா ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்துக்கு பெருமையாகும் என நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
வாக்காளரியலின் அவசியமும் கொள்கைகளும் என்ற தலைப்பில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதல்வர் டி.ஆர்.அருண் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், கூகுளில் ஓட்டராலஜி ராமராஜ் (Voterology Ramaraj) எனத் தேடினால் அவர் வாக்காளரியலின் தந்தை என கூகுள் மட்டுமல்லாது இணையதளங்களும் செயற்கை நுண்ணறிவு தளங்களும் தெரிவிக்கின்றன. பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களின் பெயர்களையே நாம் படிக்கிறோம். ஆனால், வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த லோக் ஆயுக்தா ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்துக்கு பெருமையாகும் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய கல்லூரி முதல்வர் டி.ஆர்.அருண், 1996- ல் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து வாக்காளரியல் எதற்காக தனி கல்வி பிரிவாக கற்பிக்கப்பட வேண்டும்? என்பதற்கான பத்து காரணங்களுடன் பத்து வாக்காளரியல் கோட்பாடுகளையும் கற்றலுக்கான பத்து பாட பிரிவுகளையும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தற்போதைய உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ் வகுத்துள்ளார் என கூறினார்.
வாக்காளரிலிசம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களே என்பதன் கருத்தாகும்- லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் பேச்சு –
பின்னர் சிறப்பு விருந்தினராக கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் கொள்கைகளை விளக்கிப் பேசினார். வாக்காளரிலிசம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களே என்பதன் கருத்தாகும். “வாக்கு” என்பது உச்ச அதிகாரம் மற்றும் ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலகப் போக்குகளையும் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகும். “வாக்களிப்பு” என்ற கருத்து தேர்தல் ஜனநாயகத்தின் முதல் அடித்தளமாகும். உண்மையான ஜனநாயக நிறுவனங்களை நிறுவுவதற்கு எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்பவை வாக்காளரியலின் முதலாம் மற்றும் இரண்டாம் கோட்பாடுகள் என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களின் விருப்பத்தையும் நேர்மையையும் முன்னுரிமைப்படுத்துவது ஆகிய கொள்கைகள் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, வாக்காளர் அறியாமை மற்றும் ஊழலை தேர்தல் செயல்முறையிலிருந்து வேரறுக்க வேண்டிய கூட்டுக் கடமை குடிமக்களுக்கு உள்ளது என்பவை வாக்காளரியலின் மூன்றாம் மற்றும் நான்காம் கோட்பாடுகள் என்றும் வீ. ராமராஜ் கூறினார்.
தேர்தல் நிர்வாக அமைப்புகள் அரசாங்க அதிகாரத்தின் நான்காவது கிளையாக சட்டமன்றம், செயல் துறை அரசாங்கம் மற்றும் நீதித்துறைக்கு சமமான அரசியலமைப்பு அந்தஸ்துடன் சுதந்திரமானதாக உருவாக்கப்பட வேண்டும், தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கான நெறிகாட்டு அமைப்பு, வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆணையம் மற்றும் தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தின் கீழ் சிறப்பு தேர்தல் ஆணையங்கள் ஆகியன தேர்தல் நிர்வாக அமைப்புகளின் பிரிவுகளாக தேர்தல் குறித்த அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இல்லாமல் உருவாக்கப்பட வேண்டும் என்பவை வாக்காளரியலின் ஐந்தாம் ஆறாம் கோட்பாடுகள் என்றும் வீ. ராமராஜ் குறிப்பிட்டார்.
உண்மையான ஜனநாயகத்துக்கும் நாட்டின் நல்லாட்சிக்கும் உலகின் அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும். தேசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் தகவலறிந்த வாக்காளர்களை உருவாக்குவதற்கும் சர்வதேச சட்டங்களையும் நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். வாக்காளரியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை (Academic, Research and Practice) தனிக்கல்வித்துறையாக உருவாக்க வேண்டும். ‘எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களே'(‘voters above all else’) என்பதே வாக்காளரிலிசத்தின் மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளைப் பொதுமக்களிடையே பரப்புவதே வாக்காளரியலின் பணியாகும் என்பவை வாக்காளரியலின் மற்ற நான்கு கோட்பாடுகள் என்றும் அவர் தெரிவித்தார்.





