ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரம் தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஆண்டுதோறும் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் பங்கேற்று ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கி பரிசுகள் பெற்றுச்செல்வர். முன்னதாக பாதுகாப்பு விதிமுறைகளுடன் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 750க்கும் மேற்பட்ட காளைகளும், இதனை பிடிக்க 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர்.

போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள்,சில்வர் பத்திரம், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட்டது. போட்டிகள் நடைபெறும் இடத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு, தீயணைப்பு மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். பின்னர் போட்டிகள் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரிச் செயலர் முத்துவேல் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.





