எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்? என்ற கருத்தரங்கம் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் பி. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாக்காளரியல் ஆராய்ச்சி இதழின் (Journal of Voterology and Research) இணையதளத்தையும் (https://jovar.researchpark.in/) பேராசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தற்போதைய உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ். கடந்த 30 ஆண்டுகளாக வாக்காளரியலை தனிகல்வி துறையாக மாற்ற பணியாற்றி வரும் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும். புதிதாக ஒரு குறிப்பிட்ட கல்வி பிரிவை ஏற்படுத்துவது அதனை கற்பது ஆராய்ச்சி செய்வது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது சமூக முன்னேற்றத்திற்கு உதவக்கூடியது. இந்த வகையில் வாக்காளரியல் கல்வியானது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் எதிர்காலத்தில் பாடமாக இருக்கும் தலைமை உரையில் பேராசிரியர் பி கனகராஜ் தெரிவித்தார்.

உலகில் கல்வி பிரிவுகளாக இருந்த சரித்திரம், ,தத்துவவியல் சமூகவியல் போன்றவற்றில் ஒரு பகுதியாகவே அரசியல் அறிவியல் முன்பு இருந்து வந்தது. உலக நாடுகளில் மன்னர் ஆட்சிக்கு மாற்றாக மக்களாட்சி முறை அரசாங்கங்கள் பரவ தொடங்கிய போது சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அரசியல் அறிவியல் தனி கல்வி பிரிவாக தோன்றியது. உலகில் பெரும்பாலான நாடுகள் மன்னராட்சி முறையில் இருந்து மக்களாட்சி முறைக்கு மாறியதால் அரசியல் அறிவியலில் ஒரு பகுதியாக இருந்த பொது நிர்வாகம் தனி கல்வித்துறையாக சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் மாறியது வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த வாக்காளரியல் (voterology) கல்வியை தனிகல்வித்துறையாக படிப்பதும் ஆய்வு செய்வதும் தற்போதைய தேவையாகும் என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல அரசியல் அறிவியலும் வாக்காளரியலும் மக்களாட்சியின் இரண்டு பக்கங்களாகும். மக்களாட்சியை பாதுகாக்க அரசு நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விளக்குவது அரசியலமைப்பு கல்வி. உண்மையான ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திகழ்வது வாக்காளரியல் கல்வி. அரசியலமைப்பு மற்றும் வாக்காளரியல் கல்வியை குடிமக்கள் அனைவருக்கும் வழங்குவது அரசின் கடமையாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.
அரசியல் சித்தாந்தங்கள், கட்சிகள், உள்ளூர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அரசாங்க கட்டமைப்புகள், அரசியல் நிறுவனங்கள், செயல்முறைகள் மற்றும் பொதுக் கொள்கைகள் ஆகியவற்றை அரசியல் அறிவியல் கல்வி போதிக்கிறது. புள்ளிவிவர அடிப்படையில் தேர்தல்களில் வெற்றி தோல்விகளை கணிப்பதும் வாக்காளர்களின் மனநிலையை அறிய முயற்சிப்பதும் தேர்தல் கணிப்பியல் (Psephology) ஆகும். அரசின் வேறாக மக்களாட்சி இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். வாக்காளர் விழிப்புணர்வை உருவாக்கவும் சட்டமன்றம், செயல்துறை அரசாங்கம், நீதித்துறை உள்ளிட்ட மக்களாட்சி நிறுவனங்களை பாதுகாக்கவும் நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வழி வகுப்பது வாக்காளரியலாகும். தேர்தல் முறையை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு நாட்டிலும் வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசம் (Voterologism) ஆகும். பல்கலைக்கழகங்களும் பள்ளிகளுக்கு பாடத்திட்டங்களை உருவாக்கும் அமைப்புகளும் வாக்காளரியல் கல்வியை மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வீ. ராமராஜ் கேட்டுக்கொண்டார்.





