நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான லோக் ஆயுக்தா, தகவல் ஆணையம் போன்றவற்றின் அமைப்புகள், செயல்பாடுகளை நாமக்கல் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.
நாமக்கல் சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவியர்களான நவீன், ரம்யா, ஜீவிதா, ஞானிதா, கீர்த்தனா, தேவதர்ஷினி உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் நாட்டின் அரசு எப்படி இயங்குகிறது? அதன் அதிகார அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன? என்பது குறித்து அறிய இரண்டு நாட்கள் சென்னைக்கு கல்வி சுற்றுலா (05, 06, ஜனவரி 2026) சென்று வந்துள்ளனர். ஒவ்வொரு சட்டக் கல்லூரி மாணவரும் நாட்டை இயக்கும் அமைப்புகளையும் அரசின் அதிகார அமைப்புகளையும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள இந்த சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட முன்னாள் நுகர்வோர் நீதிபதியும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினருமான டாக்டர் வீ. ராமராஜ் செய்திருந்தார்.

சட்டமன்றம், சட்டப்படி ஆட்சி நடத்தும் தலைமைச் செயலகம் மற்றும் அதன் துறைகள், சட்டப்படி நீதி வழங்கும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றை நேரில் கண்டறிந்து அவை செயல்படும் விதங்கள் பற்றி முதல் நாளில் மாணவர்கள் அறிந்து கொண்டனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசு பணியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தகவல் உரிமைச் சட்டத்தின் காவலனாக விளங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மாநில சட்ட ஆணையம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து அதன் நடைமுறைகள் குறித்து இரண்டாம் நாளில் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
இது குறித்து இதில் பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவ மாணவியர்கள் கூறுகையில், பொது ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மாநில அளவிலான விசாரணை மன்றமான தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு சென்றோம். நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தற்போதைய உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ் அவர்களை நேரில் சந்தித்து லோக் ஆயுக்தா சட்டம் அதன் பணிகள் அதிகாரங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை கேட்டறிந்தோம். தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் விசாரணை மன்றத்தையும் அதன் நிர்வாக அலுவலகத்தையும் நீதித்துறை பதிவாளர் அலுவலகத்தையும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான புலனாய்வு பிரிவையும் நேரில் கண்டறிந்தோம். மேலும், நாடு எப்படி ஆட்சி செய்யப்படுகிறது என்றும் சட்டம் இயற்றும் அமைப்புகள், செயல் துறை அரசின் துறைகள் மற்றும் அதன் அதிகார அமைப்புகள், நீதித்துறை குறித்த விரிவான உரையை கேட்டோம். மேலும் வெற்றிக்கு விதி செய்வோம் என்பதன் அடிப்படை அம்சங்களை கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைத்தது என சட்டக் கல்லூரி மாணவிகள் ஜீவிதா, ரம்யா, ஞானிதா ஆகியோர் தெரிவித்தனர்.
டாக்டர் வீ. ராமராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் மாநில சட்ட ஆணையம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை பார்வையிட்டோம். பின்னர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கு சென்று டாக்டர் வீ. ராமராஜ் அவர்களின் நண்பரான மாநில தகவல் ஆணையர்கள் இளம் பரிதி மற்றும் நடேசன் ஆகியோரோடு உரையாட வாய்ப்பு கிடைத்தது. மேலும் தகவல் ஆணையரின் விசாரணையை நேரில் கண்டறிந்தோம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து தகவலையும் பெற்றோம். இவ்வாறு எங்கள் கல்விச் சுற்றுலா அறிவார்ந்த முறையில் சென்றது.மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC), ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், குழந்தைகள் ஆணையம், மகளிர் ஆணையம் உள்ளிட்டவற்றை பார்வையிட உள்ளோம் என சட்டக் கல்லூரி மாணவிகள் தேவதர்ஷினி, கீர்த்தனா மற்றும் மாணவர் நவீன் ஆகியோர் தெரிவித்தனர்.





