ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தர்மசம்வர்த்தினி உடனமர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு கார்த்திகை மாத பைரவாஷ்டமி பூஜை நடைபெற்றது.முன்னதாக கோவிலில் அதிகாலை விநாயகர் பூஜை, தொடர்ந்து புண்யாகவாசம், பஞ்ச காவியம், ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் போன்றவை நடைபெற்றது.

தொடர்ந்து யாக பூஜையில் கே. உமாபதி சிவம், கே. தட்சிணாமூர்த்தி சிவம், ஸ்ரீ மது தில்லைநாதசிவம் உள்ளிட்ட 11 சிவாச்சாரியார்கள் பங்கேற்று பல்வேறு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்விகள் நடத்தினர். பின்னர் கோவிலில் காலபைரவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், தேன், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான மங்கள வாசனை திரவியங்களை கொண்டு காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் பல்வேறு மலர்கள் வைத்து சந்தனம் காப்பு செய்து அலங்கரித்து ஸ்ரீ காலபைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கால பைரவாஷ்டமி பூஜையின் கட்டளைதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 108 கலச பூஜை
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 108 கலச பூஜை, சுமங்கலி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்படி கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரம் முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பதினெட்டாம் ஆண்டாக 108 கலச பூஜை, சுமங்கலி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ லட்சுமி கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 108 கலசங்களுடன் பங்கேற்ற பெண்கள், சுமங்கலி பூஜையிலும் பங்கேற்றனர்.
புத்திர பாக்கியம் கிடைக்கவும், திருமண தடை நீக்கம் ,நாக தோஷம் ,செவ்வாய் தோஷம் நீங்கவும், தொழில் அபிவிருத்தி போன்றவற்றிக்கும் பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் வேண்டுதல் வைத்து அம்மனை வழிபட்டனர். கலச பூஜை ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் எஸ்.செல்வம், எஸ்.சந்துரு, எம்.சண்முகம், மணி, ஆகியோர் செய்திருந்தனர்.





