பாவை வித்யாஸ்ரம் – டைனி சீட்ஸ் பள்ளிகளில் மழலையர்களுக்கான ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம்,சேலம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம்-டைனி சீட்ஸ் பள்ளிகளின் ஆண்டு விழா ராசிபுரம் அருகேயுள்ள புதுசத்திரம் வித்யாஸ்ரம் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கைநடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக சேலம் அக்ஷயா மகளிர் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் வாணி பூஜாரி கலந்து கொண்டு பேசினார். பாவை வித்யாஸ்ரம் பள்ளியின் மாணவத் தலைவர் ஜனரஞ்சனி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து நாமக்கல் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் தலைமையாசிரியை நிரஞ்சனி, சேலம் பாவை வித்யாஸ்ரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தலைமையாசிரியை ரஜனி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
சிறப்பு விருந்தினர் மருத்துவர் வாணி பூஜாரி விழாவில் பேசுகையில், மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ வேண்டுமெனில், உங்களுக்கென்று சிறந்த நோக்கம் வேண்டும். அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்கான தகுதிகளையும், மதிப்புகளையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் லட்சியம், கடின உழைப்பு, மதிப்புகள் போன்றவற்றின் முக்கியத்துவங்களை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். மேலும் பொறியியலும், மருத்துவமும் தான் சிறந்த படிப்புகள் என்று குறுகிய எண்ணம் கொண்டிராமல், இச்சமூகத்தில் அனைத்து விதமான திறமைகளுக்கும் வாய்ப்புகளும், எதிர்காலமும் உண்டு என்பதை உணர வேண்டும்.
குழந்தைகளை நன்கு கவனித்து, உணர்ந்து, புரிந்து அவர்களின் திறமைகளையும், ஆர்வங்களையும் புரிந்து அதற்கேற்ற துறையில் அவர்களை ஊக்கப்படுத்தி, பிள்ளைகளுக்கு நல்ல நண்பராக, வழிகாட்டியாகத் திகழ வேண்டும். இன்றைய நவீன சமூகத்தில் குழந்தைகளை சுய ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்க்க வேண்டும். அந்த பண்பு அவர்களை அனைத்து சூழலிலும் வழிநடத்தும். இன்றைய தலைமுறையின் மிகப்பொிய பிரச்சனை அதிகப்படியான அலைபேசி பயன்பாடாகும். முடிந்தளவு 12 வயது வரை குழந்தைகளுக்கு அலைபேசி கொடுப்பதை தவிர்த்து, நன்கு விளையாட, ஆற்றலை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அலைபேசிக்கு பதிலாக புத்தங்களை அவர்களுக்கு கொடுத்து, புத்தகம் படிப்பதை பழக்கப்படுத்துங்கள். குழந்தைகளுடன் அதிகளவில் நேரம் செலவிடுங்கள். அவர்களுடன் கலந்துரையாடுங்கள். வளரும் பருவத்தில் சாியான பாதையில் உங்கள் பிள்ளைகளை வழிநடத்தும் போது, நாளைய தேசத்தின் சிறந்த மனிதர்களை உங்களால் உருவாக்க முடியும் என்று பேசினார்.
தொடர்ந்து பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சதீஸ் வாழ்த்துரை வழங்கிப் பேசினார். இக்கல்வியாண்டில் இசை, விளையாட்டு, கல்வி என்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த குழந்தைச் செல்வங்களுக்கு பாிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர் டைனி சீட்ஸ் – மழலையர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், துணைச் செயலாளர் என்.பழனிவேல், பொருளாளர் மருத்துவர் எம்.ராமகிருஷ்ணன், கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநர் (சேர்க்கை)கே.செந்தில், இயக்குநர் (மாணவர் நலன்) அவந்தி நடராஜன், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வர் ரோஹித் சதீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





