தேர்தல் காலத்தில் வாக்கு, வாக்காளர் போன்றவையின் இடையே ஏற்படும் ஊழல் நாட்டில் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என மக்கள் பிரதிநிதிகள், உயர் அலுவலர்களிடையே ஏற்படும் ஊழல்களை விசாரிக்கும் உயர் அமைப்பான லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஐசக் மோகன் லால் தலைமையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மற்றும் வாக்காளரியல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேசியதாவது.
சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் அறிவியல் பாடப்பிரிவு தோன்றிய போது பல நாடுகளில் மன்னர் ஆட்சியும் பல நாடுகளில் மக்களாட்சியும் இருந்தது. தற்போது பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி நடைபெறுவதால் அரசியல் அறிவியலில் இருந்து தனியாக வாக்கு, வாக்காளர் , தேர்தல்கள் குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் (Voterology) ஆகும். “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (‘voters above all else’) என்ற முழக்கத்துடன் வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசம் (Voteroloigism) என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்..
சமமான உயரம், நீளம், அகலம் உள்ள கன சதுரத்தை (cube) போல மக்களாட்சி நிறுவனங்களில் வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியன சம அளவிலான முப்பரிணாமங்களாகும். இந்த மூன்று பரிணாமங்களுக்கும் வாக்காளர்களின் அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியன சவால்களாக உள்ளன. வாக்காளர்களின் அறியாமை வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியவற்றில் ஊழலுக்கு வித்திடும். ஊழல் உச்சகட்டத்தை அடையும்போது மக்களாட்சி நிறுவனங்கள் சர்வாதிகார அமைப்புகளாக மாற நேரிடும் என்பது வாக்காளரியல் கூறும் கருத்தாகும் என்றும் டாக்டர் வீ. ராமராஜ் குறிப்பிட்டார்.
ஜனநாயக தேர்தல் முறை மட்டும் மக்கள் நல அரசு அரசை வழங்க முடியாது. ஜனநாயக தேர்தல் முறையில் எந்த விலையிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்களால் நடத்தப்படும் அரசாங்கம் மற்றும் மக்கள் நல அரசாகச் செயல்பட சித்தாந்த ரீதியாக செயல் திட்டத்தை முன்வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்களால் நடத்தப்படும் அரசாங்கம் என நவீன ஜனநாயகத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இரண்டாவது வகை ஜனநாயக அரசை உருவாக்க பாடுபடுவது வாக்காளரிலிசமாகும் என்றும் கருத்தரங்கில் பேசிய டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
சட்டம் இயற்றும் பாராளுமன்றம் போன்ற அமைப்புகளும் சட்டப்படி ஆட்சி நடத்தும் செயல்துறை அரசாங்கமும் சட்டப்படி நீதி வழங்கும் நீதித்துறையும் ஒன்றின் அதிகாரத்தில் மற்றவர் தலையிடாத வகையில் பெரும்பாலான நாடுகளில் அரசியலமைப்புச் சட்டங்கள் உள்ளன. இந்த மூன்று அமைப்புகளுக்கும் இணையான அரசியல் அமைப்பு அந்தஸ்து கொண்டாக நான்காவது அமைப்பாக தேர்தல் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் நிறுவனங்கள் என்ற வகையில் முதலாவதாக தேர்தல் நடத்தும் ஆணையமும் இரண்டாவதாக வாக்காளர்கள் கல்வியை வாக்காளர்களுக்கு போதிக்கவும் வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தலை வலுப்படுத்தவும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (Commission for the Protection of Voters Rights) மூன்றாவதாக ஆறு மாதங்களில் தேர்தல் குறித்த வழக்குகளில் மேல்முறையீடுகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களும் (Election Tribunals) இருக்க வேண்டும் என்பது வாக்காளரியல் கொள்கையாகும் என்று டாக்டர் வீ. ராமராஜ் கூறினார்.
மனித உரிமைகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு. ஊழல் ஒழிப்பு போன்றவற்றிற்கு இயற்றப்பட்டுள்ள சர்வதேச சட்டங்களை போன்ற வாக்காளரியல் சர்வதேச சட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் தேர்தல் மற்றும் வாக்களிப்பு பற்றிய புள்ளிவிவர மற்றும் சமூகவியல் அடிப்படையிலான ஆய்வுகளைக் குறித்த பாடப்பிரிவு தேர்தல் கணிப்பியல் (Psephology). அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தில் இருந்து வாக்கு வாக்காளர் மற்றும் தேர்தல்களை பாதுகாத்து மக்களாட்சி அமைப்புகளை மக்கள் நல நிறுவனங்களாக பாதுகாக்க முனைவது வாக்காளரியல் கல்வியும் வாக்காளரிலிசமும் ஆகும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
வாக்காளரியல் கோட்பாடுகள், ஜனநாயகம், நிர்வாகம் மற்றும் அமைதி குறித்த வாக்காளரிலின் பார்வை, சமூகவியல் மற்றும் உளவியல் மீதான வாக்காளரிலின் அணுகுமுறை, தேர்தல் கொள்கை, சட்டம் மற்றும் நீதி, உலகளாவிய தேர்தல் முறைகள், ஒப்பீட்டு தேர்தல் முறைகள், வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல், அரசியல் கட்சிகள் மற்றும் உத்திகள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வாக்காளரியல் கருப்பொருள் களங்களாக கொண்ட வாக்காளரியல் முதுகலை பட்டப்படிப்பை (M.A., Voterology) பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாக்காளரியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் அவசியமான நியாயமான, நேர்மையான தேர்தல்கள் நடைபெறுவதற்கு வாக்காளர் விழிப்புணர்வு மட்டுமே சிறந்த கருவியாகும். என்று டாக்டர் வீ. ராமராஜ் கூறினார்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் அனைத்து அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே முதலமைச்சர், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசின் அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்றும் வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.





