தமிழகத்தில் திமுக அரசு மக்களைப்பற்றி கவலைப்படாமல் எந்த ஆர்பாட்டம், போராட்டம் நடத்தினாலும் கண்டு கொள்ளாமல் ஆட்சி செய்துவருகிறது என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி எம்எல்ஏ., குறிப்பிட்டார்.
ராசிபுரம் ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதை கண்டித்தும், வேறு இடத்தில் டைடல் பூங்காவை அமைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில், ராசிபுரத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி எம்.எல்ஏ., தலைமை வகித்தார். நகர அதிமுக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி மாநில இணை செயலாளருமான டாக்டர் வெ.சரோஜா முன்னிலை வகித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், டைடல் பூங்கா அமைக்க முயற்சி செய்து வரும் திமுக அரசை கண்டித்தும், அந்தப் பூங்காவை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் கட்சியினர் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் டைடல் பூங்கா அமைத்தால் கல்லூரி பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் அதனை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமெழுப்பினர்.
முன்னதாக ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசியது: திருவள்ளுவர் அரசு கல்லூரியில் டைடல் பார்க் அமைக்கக்கூடாது என ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். அதனை ஏற்காமல் டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. டைடல் பூங்கா அமைப்பது நாங்கள் எதிர்க்கவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்கும் இந்த டைடல் பூங்கா மாணவ மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்பதனை தான் வலியுறுத்துகிறோம்.
ஏற்கனவே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் நடந்தது. கோவையில் விமான நிலையத்திற்கு அருகே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுபோன்ற சம்பவங்கள் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இந்த திட்டத்தை கல்லூரி வளாகத்தில் செயல்படுத்துவதை எதிர்க்கின்றோம். கல்லூரி மைதானத்தில் டைடல் பூங்கா அமைக்கப்படுவதால் எதிர்காலத்தில் கல்லூரி விரிவாக்கம் செய்வது பாதிக்கப்படும்.
திமுக அரசு எந்த ஆர்பாட்டம், போராட்டம் நடத்தினாலும் அதனை கண்டு கொள்வதில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி செய்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் பயன் பெறும் திட்டங்கள் எதுவும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதனை திமுக அரசு இன்று வரை முழுமையாக முடிக்கவில்லை. தேர்தல் வரவுள்ளதால் ராசிபுரம் நகரத்திற்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது.
திமுக அரசு எப்பொழுது முடிவுக்கு வரும், அதிமுக அரசு எப்போது ஆட்சிக்கு வரும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் தற்போது மது கடைகளை குறைக்காமல் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய கடைகளை தொடங்கி வருகின்றனர். மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகியப் பகுதிகளில் இது போன்ற புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி முதல் கல்லூரி வரை கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக போதை பொருள் நடமாட்டம் உள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு விட்டது. இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும்.
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில், வாடகை, மின் கட்டணம், போன்றவை கடுமையாக உயர்ந்து விட்டது. ஐந்தாயிரம் கோடி கடன் வாங்கி தான் ஆட்சி நடத்துகிறார்கள். மக்கள் விரோத திமுக ஆட்சியின் செயல்களை முடிவுக்கு கொண்டு வர, வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை அனைவரும் ஒட்டுமொத்த குரலில் ஆதரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தவுடன், மக்களை பாதித்துள்ள திட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குகூட பல்வேறு வகைகளில் சிரமப்பட்டு வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு செய்து வரும் மாபெரும் துரோகம் இழைத்து வருகிறது. கடந்த 54 மாத காலமாக வெற்று வீண் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வரும் திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி அவர்களது எதிர்காலத்தை பாழாக்கி வருகின்றனர்.
ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு சட்டக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மாபெரும் குடிநீர் திட்டங்கள், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இப்போது திமுக ஆட்சியில் மக்கள் எவ்வித பயனையும் பெறவில்லை. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்க இருக்கும் திமுக அரசை கண்டிக்கின்றோம். இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், முன்னாள் எம்எல்ஏ., பொன்.சரஸ்வதி, மாநில வர்த்தக அணி இணைச்செயலர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், மாவட்ட அவைத் தலைவர் கே.பி.கந்தசாமி, கட்சியின் அமைப்புச் செயலாளர் சேவல் வி.ராஜூ, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, மாவட்ட வர்த்தக அணி செயலர் ராகா சு.தமிழ்மணி, இணைச்செயலர் பிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை செயலர் இ.ஆர்.சந்திரசேகர், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் எம். சிங்காரவேலு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ஏ.வி.பி, முரளி, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலர் பொன்.அரவிந்தன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் கே.பி.பி.சுரேஷ்குமார், வி.டி தமிழ்செல்வன், மாவட்ட மகளிரணி செயலர் வைரம் தமிழரசி, பள்ளிப்பாளையம் நகர செயலர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, திருச்செங்கோடு நகரச் செயலர் எம்.அங்கமுத்து, ஒன்றியச் செயலாளர்கள் கே.பி.எஸ்.சரவணன், எஸ்.வேம்புசேகரன், எஸ்.பி.தாமோதரன், ஜி.பி.ரமேஷ், மல்லை மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராதா சந்திரசேகரன், வழக்குரைஞர்கள் பரணிதரன், தனசேகரன், ஆர்.கே.டி.தங்கதுரை, ஜி.பூபதி, ஆர்.பட்டணம் பேரூர் செயலர் எம்.பாலசுப்பிரமணியம், வெண்ணந்தூர் எஸ்.என்.கே.பி.செல்வம், அத்தனூர் செழியன், கிருஷ்ணமேனன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.பி.சீனிவாசன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்கரைப்பட்டி எம். கண்ணன், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.





