கோவை சட்டக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் தலைமையில் “இந்திய குடியரசு @75 – மைல்கற்கள் மற்றும் முன்னால் உள்ள சவால்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது.

ஒரு நாடு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய உள்ளடக்கங்கள் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தின் சூழல் மற்றும் உருவாக்கியவர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டமானது எல்லா காலத்திலும் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஒத்ததாக அல்லது உருவாகும் புதிய சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூற முடியாது. இதன் காரணமாகவே, மக்களின் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப கடந்த 75 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பில் 106 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராமராஜ் தெரிவித்தார்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பில் காலத்தின் தேவைக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ள கடந்த காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அமெரிக்க அரசியலமைப்பை திருத்துவதில் உள்ள கடினத் தன்மை காரணமாக அவசியமான அரசியலமைப்பு திருத்தங்களை கூட அமெரிக்க அரசியலமைப்பில் மேற்கொள்ள இயலவில்லை. தேவைக்கு ஏற்ற திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் நெகிழும் தன்மையில் உள்ளதால்தான் இந்திய அரசியலமைப்பு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது என ராமராஜ் தெரிவித்தார்.
“வாக்காளர்கள்” என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும்-
வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியன குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் (Voterology) கல்வியாகும். மக்களுக்கு நலன் வழங்கும் மக்களாட்சி உருவாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளரியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் என ராமராஜ் தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் உச்ச அதிகாரமான வாக்களிக்கும் உரிமை வாக்காளர்களிடம் உள்ளது. ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலக அரசியல் போக்குகளையும் வாக்கு மட்டுமே தீர்மானிக்கிறது. வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது, ஜனநாயகம் தொடங்குகிறது. ஜனநாயகத்தின் மூன்று அம்சங்களான வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழல் தொடங்கினால், ஊழல் இல்லாத ஜனநாயக ஆட்சியை நாம் எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான பொறுப்பு (shared responsibility) குடிமக்களுக்கு உள்ளது என்றார் ராமராஜ்.
வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய வாக்காளர்கள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தையும் (National Commission for Protection of Voters’ Rights and Education) ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களையும் (Election Tribunals) அமைக்கலாம். தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற அரசியலமைப்பு அந்தஸ்தை வாக்காளர் ஆணையத்துக்கும் தேர்தல் தீர்ப்பாயங்களுக்கும் வழங்கலாம். இதற்கான அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள் அவசியமானது என ராமராஜ் கருத்து தெரிவித்தார்.
பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவில் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் அதிகமாகவும் எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் குறைவாகவும் இருப்பது இயல்பானது. இந்தக் தேர்வு குழு மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு பதிலாக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் நியாயமான திறமையான நபர்களை தேர்தல் ஆணையராக நியமிக்குமாறு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கலாம். இரு தரப்பு வாதங்களைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தேர்தல் ஆணையர்களை இறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு திருத்தங்கள் தற்போதைய அரசியலுக்கு உகந்ததாகும் என ராமராஜ் கருத்து தெரிவித்தார்.
கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான சட்டக் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக துணை பேராசிரியர் எஸ். துர்கா வரவேற்புரையும் இறுதியாக துணை பேராசிரியர் முகமது அலி நன்றிஉரையும் ஆற்றினார்கள்.





