நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கான விழாவில் கல்லூரி முதல்வரும் (பொ), அரசியல் அறிவியல் துறைத் தலைவருமான ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார்.

கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர் குமரகுரு வரவேற்றுப் பேசினார். அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசியரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் ஒய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார், ராசிபுரம் இன்னர் வீல் சங்கத் தலைவர் சிவலீலாஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினர். விழாவில் மாணவர்களிடையே பேசிய ஒய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார், திருக்குறளை பின்பற்றினால் மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேறலாம். அதே போல் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை அறிந்து, மாணவர் சமுதாயத்திற்கான அவரது கருத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் திட்ட அலுவலரும், தமிழ்த்துறை பேராசிரியருமான ரம்யாமகேஸ்வரி ஏற்பாட்டில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு வைத்தனர். இதில் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் என திரளானோர் பங்கேற்று முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றனர்.இவ்விழாவில் யுஜிசி நடத்திய கல்லூரி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் விவேகானந்தனுக்கு பாராட்டி பரிசளிக்கப்பட்டது.