கல்வி நிறுவனங்களில் கல்வி வளர்ச்சி தினவிழா
ராசிபுரம் பகுதியில் காமராஜர் பிறந்த தினவிழா கல்வி வளர்ச்சி தினவிழாவாக பல்வேறு கல்வி நிறுவனங்களின் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் காமராஜர் 123-வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தினவிழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தலைவர் க.சிதம்பரம் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ப.அசோக்குமார் முன்னிலை வகித்தார். பின்னர், காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். பெருந்தலைவரின் சாதனைகள், செயல்பாடுகள், வாழ்க்கை முறை பற்றி கல்லூரித் தலைவர் க.சிதம்பரம் மாணவர்களிடம் விளக்கிக்கூறினார். மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதே போல் மூலப்பள்ளிப்பட்டி கிரீன் வேர்ல்ட் எக்ஸெல் சிபிஎஸ்இ பள்ளி – ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து பள்ளி வளாகத்தில் நடத்திய காமராஜர் பிறந்த தினவிழாவில், பள்ளி முதல்வர் பிரவீனா வரவேற்றுப் பேசினார். தாளாளர் வி.வரதராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் காமராஜர் போல் உடை அணிந்து வந்து அவரது வரலாற்றைக்கூறிய மாணவ மாணவிர்களுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் இ.என். சுரேந்தரன் நினைவு பரிசுகள் வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் பள்ளியின் பொருளாளர் திருமூர்த்தி (எ) ரவி, பள்ளி நிர்வாகிகள் பி.பிரபு, என் .தனசேகரன், ராசிபுரம் ரோட்டரி சங்க செயலாளர் மஸ்தான், முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், எம். முருகானந்தன், சி.கே.சீனிவாசன் நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஆண்டகளூகேட் அருள்மிகு வெங்கடேஸ்வரா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமைாசிரியர் ரெ.உமாதேவி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சு.புவனேஸ்வரி, சு.லட்சுமிநாராயணன், மணி, ப.சீனிவாசன், ஜே.மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராசிபுரம் பகுதியில் காமராஜர் பிறந்த தினவிழா
ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்த தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் காந்தி மாளிகை முன்பாக நடைபெற்ற விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.ஸ்ரீராமுலு முரளி தலைமை வகித்தார். காங்கிரஸ் டிரஸ்டு போர்டு தலைவர் ஏ.என்.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று காமராஜர் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டன. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், மாவட்ட வர்த்தக அணித் தலைவர் டி.ஆர்.சண்முகம், கட்சி நிர்வாகிகள் வழக்குரைஞர் வி.சுந்தரம், அ.பிரகஸ்பதி, கே.டி.ராமலிங்கம், கு.மா.பா.குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் ஆர்.புதுப்பாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தினவிழாவில் கிராம காங்கிரஸ் தலைவர் அ.பிரகஸ்பதி பங்கேற்று படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

இதே போல் ராசிபுரம் இன்னர்வீல் கிளப் சார்பில் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி தினத்தை தொடர்ந்து ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு நோட்டு, பேனா, புத்தகம், பென்சில் போன்றவை வழங்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியர் கு.பாரதி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இன்னர்வீல் கிளப் தலைவர் வழக்குரைஞர் சிவலீலா ஜோதி, பொருளாளர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்று இதனை வழங்கினர்.