ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இதன்படி ஆனிமாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி கணபதி ஹோமம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் ,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் பல்வேறு முத்துக்கள், பவளங்கள் பதித்த மலர்களால் ராஜ சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜை சுமங்கலி பெண்கள் நீடூடி வாழவும், நோய் நொடி இன்றி அனைவரும் வாழவும், மேலும் திருமண பாக்கியம் கைகூடவும், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், மழைப்பொழிவு ஏற்படவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பெண்கள் வி்ளக்கேற்றி வைத்து வழிபாட்டில் பங்கேற்றனர்.

இந்த திருவிளக்கு பூஜையை ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் இரா. முருகேசன் சுவாமிகள், சு.கணேசன், சு.கடல்கரை, மு.சண்முகம் உள்ளிட்ட கோவில் அர்ச்சகர்கள் திருக்கோவில் பூசாரிகள் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.